செய்திகள்
அமித் ஷா

குடியுரிமை சட்டத்தில் இருந்து ஒரு அங்குலம்கூட பின்வாங்க மாட்டோம் -அமித் ஷா உறுதி

Published On 2020-01-03 10:25 GMT   |   Update On 2020-01-03 10:25 GMT
எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வந்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து அரசு பின்வாங்கப் போவதில்லை என உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்தார்.
ஜோத்பூர்:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். 

இது ஒருபுறமிருக்க, குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து, பாஜக சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவ்வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் திருத்தப்பட்ட குடியுரிமை திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை உள்துறை மந்திரி அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் ஒரு அங்குலம்கூட பின்வாங்கப்போவதில்லை. எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வந்தாலும் இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து அரசு பின்வாங்கப் போவதில்லை. எதிர்க்கட்சிகள் விரும்பும் அளவுக்கு தவறான தகவல்களை பரப்பலாம்.

திருத்தப்பட்ட இந்த சட்டம், யாரிடம் இருந்தும் இந்திய குடியுரிமையை பறிக்காது, ஆனால் குடியுரிமையை வழங்குகிறது. ஆனால், தவறான தகவல்களை பரப்புவதன் மூலம், காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியல் செய்கிறது. 

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News