செய்திகள்
விஜய் மல்லையா

விஜய் மல்லையாவின் சொத்துகளை வங்கிகள் பயன்படுத்தலாம் - மும்பை கோர்ட்டு அனுமதி

Published On 2020-01-01 13:35 GMT   |   Update On 2020-01-01 13:35 GMT
விஜய் மல்லையாவின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை பயன்படுத்திக் கொள்ள மும்பை கோர்ட்டு அனுமதி வழங்கியது.
மும்பை:

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் தொழிலதிபர் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை, இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. 

இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடக்கிறது. இவ்வழக்கில் விஜய் மல்லையா ஜாமீனில் உள்ளார்.  அவரை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி பணமோசடி தடுப்பு சட்டத்திற்கான சிறப்பு கோர்ட்டு அறிவித்தது. விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது.

விஜய் மல்லையாவுக்கு கடன் வழங்கிய வங்கிகள், 2013லிருந்து அவர் வழங்க வேண்டிய 11.5 சதவீத வட்டியுடன் சேர்த்து ரூ.6.203.35 கோடியை திரும்ப பெற, அவரது சொத்துகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பு ஒன்றினால், பறிமுதல் செய்யப்பட்ட, விஜய் மல்லையாவின் சொத்துகளை கலைப்பதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என பணமோசடி தடுப்பு சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறியிருந்தது.

இந்நிலையில், விஜய் மல்லையாவின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை வங்கிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மும்பை கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவால் பாதிக்கப்பட்ட தரப்பினர் வரும் 18-ம் தேதிக்குள் மும்பை கோர்ட்டில்  மேல்முறையீடு செய்யலாம் என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News