செய்திகள்
கோப்பு படம்

குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டை கண்டித்து டெல்லியில் நாளை மறுநாள் காங்கிரஸ் தர்ணா

Published On 2019-12-21 14:09 GMT   |   Update On 2019-12-21 16:56 GMT
டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக நாளை மறுநாள் காங்கிரஸ் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது.
டெல்லி:

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. 

அதேபோல், வங்காளதேச நாட்டில் இருந்து அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. இதன் இறுதி வரைவு பட்டியலும் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு அசாம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கொண்டு வரப்படும் என உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார். 



இதற்கிடையில், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இந்த போராட்டங்கள் சில பகுதிகளில் வன்முறையில் முடிந்த வண்ணமும் உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை மறுநாள் 
(திங்கள் கிழமை )தர்ணா போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 திங்கள் கிழமை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத்தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News