செய்திகள்
போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசும் போலீசார் (கோப்பு படம்)

அசாம்: போராட்டக்காரர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி

Published On 2019-12-12 15:08 GMT   |   Update On 2019-12-12 15:08 GMT
அசாமில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
கவுகாத்தி:

வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வாழ்ந்து அங்கு துன்புறுத்தப்பட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் விதமான குடியுரிமை சட்ட மசோதா நேற்று பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறியது. 

இதற்கிடையில், வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவி தஞ்சம் அடைந்துள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டால் தங்கள் பெரும்பான்மையும், பாரம்பரியமும் அழிந்துவிடும் என  வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்களும், பழங்குடி மக்களும் அஞ்சமடைந்துள்ளனர். 

இதனால் அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக அசாம் மாநிலத்தில் போராட்டக்காரர்கள் கடைகள், வீடுகள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் தீ வைத்து கொளுத்தி போராடி வருகின்றனர். 

இந்த போராட்டக்காரர்களை ஒடுக்க அம்மாநிலத்தில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மேலும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். 



இந்நிலையில், அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் இன்று போராட்டம் நடைபெற்றது. 

அப்போது போலீசார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்தனர். போலீசார் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் படுகாயமடைந்தனர். 

பின்னர் அந்த நபர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டனர். ஆனால், துப்பாக்கி குண்டு பாய்ந்த இரு நபர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
Tags:    

Similar News