செய்திகள்
சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்காக குவிந்த அய்யப்ப பக்தர்கள்

நடை திறந்த 20 நாளில் சபரிமலை கோவில் வருமானம் ரூ.69 கோடி

Published On 2019-12-09 05:40 GMT   |   Update On 2019-12-09 11:53 GMT
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடை திறந்த 20 நாளில் ரூ.69 கோடியே 39 லட்சம் வருமானமாக கிடைத்து உள்ளது.
திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை பிரசித்திபெற்றதாகும்.

இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் 16-ந்தேதி திறக்கப்பட்டது. தற்போது சபரிமலையில் இளம் பெண்கள் தரிசனம் தொடர்பாக எந்தவித பதட்டமும் இல்லாமல் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. கூடுதல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதுபோன்ற காரணங்களால் நடை திறந்த முதல்நாளில் இருந்தே சபரிமலையில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

சபரிமலையில் தற்போது மழை பெய்து வருகிறது. ஆனாலும் மழையையும் பொருட்படுத்தாமல் இருமுடி கட்டு சுமந்த பக்தர்கள் சரண கோ‌ஷம் எழுப்பியபடி சபரிமலைக்கு சென்றவண்ணம் உள்ளனர். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்தபடி இருப்பதால் பக்தர்களை வரிசையில் போலீசார் சன்னிதானம் நோக்கி அனுப்பி வருகிறார்கள். இதனால் சாமி தரிசனம் செய்ய 7 மணி நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டியது உள்ளது.

மேலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தேவசம்போர்டு செய்து கொடுத்து உள்ளது. அரவணை, அப்பம் போன்றவை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இந்த ஆண்டு கோவிலுக்கு கிடைக்கும் வருமானமும் அதிகரித்து வருகிறது.

நடை திறந்த 20-வது நாளான கடந்த 6-ந்தேதி வரை கோவிலுக்கு வருமானமாக ரூ.69 கோடியே 39 லட்சம் கிடைத்து உள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் ரூ.41 கோடியே 84 லட்சம் மட்டுமே வருமானமாக கிடைத்து இருந்தது. இதில் பிரசாத விற்பனை மூலம் ரூ.32 கோடியும், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.23 கோடியே 58 லட்சமும் கிடைத்துள்ளது.

தற்போது சபரிமலைக்கு தமிழக பக்தர்கள் அதிக அளவு வரத்தொடங்கி உள்ளனர். சபரிமலையில் உள்ள பம்பையாற்றில் தற்போது அதிக அளவு தண்ணீர் ஓடுகிறது. இதனால் பக்தர்கள் பாதுகாப்பாக புனித நீராடும்படி போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
Tags:    

Similar News