செய்திகள்
தீ வைத்து எரிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற காட்சி

உன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு

Published On 2019-12-07 05:24 GMT   |   Update On 2019-12-07 05:24 GMT
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை எரித்துக் கொன்றது தொடர்பாக விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை எரித்துக்கொன்ற வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இளம்பெண் மரணம் அடைந்தது குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். 



மாநில நீதித்துறை மந்திரி பிரஜேஷ் பதக் கூறியதாவது:-

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்திருப்பது கவலை அளிக்கிறது. இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றும்படி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திடம் தெரிவிக்க உள்ளோம். இந்த வழக்கை தினந்தோறும் விசாரணை என்ற அடிப்படையில் விசாரித்து தீர்ப்பு வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ள உள்ளோம். 

உன்னாவ் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில் 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்குகளை அரசியலுடன் தொடர்பு படுத்தக்கூடாது. குற்றவாளிகள் எவ்வளவு அதிகாரம் படைத்தவர்களாக இருந்தாலும், அவர்களை விடமாட்டோம். கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News