செய்திகள்
ப.சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு

Published On 2019-11-01 10:01 GMT   |   Update On 2019-11-01 10:42 GMT
சிதம்பரத்தின் உடல்நிலை நலமாக உள்ளதால், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட் இன்று மறுத்துவிட்டது.
புதுடெல்லி:

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இரண்டு வழக்குகளிலும் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். 

சிபிஐ வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் வழங்கப்படவில்லை. அமலாக்கத்துறையின் விசாரணைக் காவல் முடிவடைந்ததும், சிதம்பரம் மீண்டும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
இதற்கிடையே, ப.சிதம்பரத்தின் உடல்நிலையை காரணம் காட்டி இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ப.சிதம்பரத்தின் உடல்நிலை மோசமாக இருப்பதால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், இதற்காக 6 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அந்த மனுவை ஐகோர்ட் விசாரித்தது. அப்போது, ப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ப.சிதம்பரத்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம் என்றும் அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட உயர் நீதிமன்றம், சிதம்பரத்தின் உடல்நிலை மற்றும் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டுமா என்பது குறித்து வெள்ளிக்கிழமைக்குள் அறிக்கை அளிக்கும்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்டது. 

சிதம்பரத்துக்கு ஸ்டெரைல் செய்யப்பட்ட அறை ஒதுக்கவேண்டுமா? எனவும் மருத்துவக்குழு பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. 



இந்நிலையில், ப.சிதம்பரத்தின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழு டெல்லி ஐகோர்ட்டில் இன்று சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், சிதம்பரத்தின் உடல்நிலை நலமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு கொசுவலை கொடுக்கவும், வாரம் ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்யவும், மாஸ்க் வழங்கவும் வேண்டும்.

புற நோயாளியாக சிகிச்சை அளிக்க வேண்டும். அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க தேவையில்லை எனக் கூறிய டெல்லி ஐகோர்ட், அவருக்கு ஜாமீன் கொடுக்க ஐகோர்ட் மறுத்ததுடன், இடைக்கால ஜாமீன் மனுவை முடித்து வைத்தது.
Tags:    

Similar News