செய்திகள்
கோப்புப்படம்

உளவுத்துறை தலைமை அலுவலகத்துக்கு குறி வைக்கும் பயங்கரவாதிகள்

Published On 2019-10-24 08:21 GMT   |   Update On 2019-10-24 08:21 GMT
டெல்லியில் உள்ள உளவுத்துறை தலைமை அலுவலகமான ‘ரா’ அலுவலகத்தில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை கூறி உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் மீண்டும் ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் ஜெய்ஷ்- இ-முகமது, லஸ்கர்-இ- தொய்பா பயங்கரவாதிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களது சதி திட்டம் அனைத்தும் உளவுத்துறையின் உதவியுடன் முறியடிக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள பாகிஸ்தான் அரசு எல்லையில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் டெல்லியில் இந்த மாத இறுதிக்குள் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு இருப்பதை உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. டெல்லியில் உள்ள உளவுத்துறை தலைமை அலுவலகமான ‘ரா’ அலுவலகத்தில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை கூறி உள்ளது.

மேலும் டெல்லியில் உள்ள ராணுவ முகாம் மீதும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களுடன் கைவரிசை காட்ட முயற்சிகள் நடப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. அடுத்த வாரம் இந்த தாக்குதலை நடத்தும் வகையில் பயங்கரவாதிகள் பேசியதை உளவுத்துறை இடமறித்து கேட்டு இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ‘ரா’ அலுவலகத்துக்கும், ராணுவ முகாம்களுக்கும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது தவிர டெல்லியில் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகளில் நேற்று முதல் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வந்து செல்லும் நபர்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் அதிரடிப்படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிரமாக சோதிக்கப்படுகின்றன. நேற்று முதல் டெல்லியின் பல பகுதிகள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

பயங்கரவாதிகள் பஞ்சாப் மாநிலம் வழியாக ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ராணுவ முகாம்களில் கைவரிசை காட்ட முடியாவிட்டால் பொதுமக்கள் அதிகமாக வாழும் குடியிருப்புகளுக்குள் சென்று தாக்குதலை நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முடிவு செய்து இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் டெல்லியில் உள்ள பெரிய குடியிருப்புகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.
Tags:    

Similar News