செய்திகள்
அமித் ஷா

பாரதிய ஜனதாவுக்கு டிசம்பரில் புதிய தலைவர் - அமித் ஷா அறிவிப்பு

Published On 2019-10-15 06:56 GMT   |   Update On 2019-10-15 07:36 GMT
வருகிற டிசம்பரில் பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று அமித் ஷா அறிவித்துள்ளார்.

புதுடெல்லி:

பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராக அமித் ஷா தொடர்ந்து இருந்து வருகிறார்.

2014-ம் ஆண்டு ஜூலை மாதம் அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பாரதிய ஜனதா விதிகள்படி தலைவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

தொடர்ந்து 2 தடவை மட்டுமே தலைவராக இருக்க முடியும். 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் கட்சிக்கு தேர்தல் நடத்தப்பட்டு அமித் ஷா மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த ஜனவரி மாதம் அவருடைய பதவிக்காலம் முடிந்தது. ஆனாலும், பாராளுமன்ற தேர்தல் நடந்ததால் பதவிக்காலம் நீடிக்கப்பட்டது.

பாரதிய ஜனதாவில் ஒரு நபர் 2 பதவிகளில் இருக்க முடியாது. ஆனால், அமித் ஷா பாரதிய ஜனதா தலைவர், மத்திய மந்திரி என 2 பதவிகளில் நீடித்து வருகிறார்.

அமித்ஷாவுக்காக கட்சி விதிகள் மாற்றி அமைக்கப்படலாம். இதன் மூலம் அவர் 2 பதவிகளில் இருப்பதுடன் தலைவர் பதவியில் மேலும் நீடிப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

 


ஆனால், வருகிற டிசம்பரில் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று அமித்ஷா அறிவித்துள்ளார். வாராந்திர பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கட்சியின் உள்கட்சி அமைப்பு தேர்தல்கள் முழுமையாக நடத்தப்பட்டு இறுதியில் டிசம்பரில் புதிய தலைவரை தேர்வு செய்வோம் என்று அமித்ஷா கூறினார்.

நீங்களே தொடர்ந்து கட்சியை பின்னால் இருந்து இயக்குவீர்களா? என கேட்டதற்கு பாரதிய ஜனதா கட்சி என்பது காங்கிரஸ் கட்சி அல்ல. காங்கிரசில் யார் வேண்டுமானாலும் கட்சியை பின்னால் இருந்து இயக்கலாம் என்ற நிலை உளள்து.

ஆனால், பாரதிய ஜனதாவில் கட்சி செயல்பாடுகளுக்கு என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த விதிகள்படிதான் கட்சி செயல்படும். கட்சியை யாரும் பின்னால் இருந்து இயக்க முடியாது என்று கூறினார்.

புதிய தலைவரை தேர்வு செய்ய இருப்பதால் தற்போதைய செயல் தலைவர் ஜே.பி. நட்டா புதிய தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News