செய்திகள்
ப.சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் அக்டோபர் 17 வரை நீட்டிப்பு

Published On 2019-10-03 10:20 GMT   |   Update On 2019-10-03 10:20 GMT
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இதில்  சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ந்தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரித்தனர்.
 
பின்னர், அவரை செப்டம்பர் 5-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவரது நீதிமன்ற காவல் அக்டோபர் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.



சிதம்பரத்தை ஜாமீனில் விடுவிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 30-ம் தேதி தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிந்து ப.சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தபட்டார். அவரது காவலை நீட்டிக்க வேண்டும் என சிபிஐ கோரியது.

இதையேற்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹார், ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். 
Tags:    

Similar News