செய்திகள்
எடியூரப்பா

எடியூரப்பாவை ஓரங்கட்டும் பாஜக- கட்சி நிர்வாகிகள் நியமனங்களில் முக்கியத்துவம் குறைப்பு

Published On 2019-09-30 02:06 GMT   |   Update On 2019-09-30 02:06 GMT
முதல்-மந்திரி எடியூரப்பாவை பா.ஜனதா ஓரங்கட்டி வருகிறது. குறிப்பாக கட்சி நிர்வாகிகள் நியமனங்களில் அவருக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு :

கர்நாடக முதல்-மந்திரியாக பதவி ஏற்று செயலாற்றி வரும் எடியூரப்பா 75 வயதை தாண்டிவிட்டார். அதனால் அவர் முதல்-மந்திரியாக இருந்தாலும் கூட அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் முழுமையாக குறைக்கப்பட்டு இருக்கிறது. கட்சி தலைவர் பதவி அரவிந்த் லிம்பாவளிக்கு வழங்க வேண்டும் என்று எடியூரப்பா கட்சி மேலிடத்திடம் கூறினார். ஆனால் அவரது ஆலோசனையை நிராகரித்துவிட்டு, நளின்குமார் கட்டீலை பா.ஜனதா நியமனம் செய்தது. இதனால் எடியூரப்பா அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பிறகு பெங்களூரு மாநகராட்சி மேயர் வேட்பாளர் தேர்வு குறித்து எடியூரப்பா பெங்களூருவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். மேயர் வேட்பாளரை தேர்வு செய்யும் விஷயத்தில் கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிய ரகு எம்.எல்.ஏ. தலைமையில் எடியூரப்பா ஒரு குழுவை அமைத்தார்.

ஆனால் கட்சியின் மாநில தலைவர் நளின் குமார் கட்டீல், ஒரு அறிக்கை வெளியிட்டு, மேயர் வேட்பாளரை தேர்வு செய்ய எந்த குழுவும் அமைக்கப்படவில்லை என்றும், அவ்வாறு வெளியான செய்திகள் தவறானவை என்றும் அறிவித்தார். இதனால் எடியூரப்பாவுக்கும், மாநில தலைவர் நளின்குமார் கட்டீலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் சில நாட்களுக்கு முன்பு, நளின்குமார் கட்டீல், எடியூரப்பாவுக்கு எதிரான அணியை சேர்ந்த பானுபிரகாஷ் உள்பட 2 பேரை மாநில துணைத்தலைவர்களாக நியமனம் செய்துள்ளார். இதனால் எடியூரப்பா கடும் அதிருப்தி அடைந்துள்ளார். உடனே எடியூரப்பா தனது ஆதரவாளரான பி.ஜே.புட்டசாமிக்கு மாநில திட்டக்குழு துணைத்தலைவர் பதவியை வழங்கினார்.



கர்நாடக பா.ஜனதாவில் மேற்கொள்ளப்படும் புதிய நியமனங்களை நளின் குமார் கட்டீல் தன்னிச்சையாக மேற்கொண்டு வருவதாகவும், இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எந்த தகவலையும் தெரிவிப்பது இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா மேலிடம் எடியூரப்பாவிடம், 75 வயதை தாண்டிவிட்ட போதிலும் முதல்-மந்திரி பதவியை வழங்கி இருப்பதாகவும், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்குமாறும் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகத்தில் குறிப்பாக வட கர்நாடகம், கடலோர கர்நாடகம், தென்கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்து பெரிய பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த பாதிப்புகள் ஏற்பட்டு 50 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. மத்திய அரசு இதுவரை நிதி உதவியை வழங்கவில்லை. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக குறை கூறி வருகின்றன. இதற்கு பதிலளிக்க முடியாமல் எடியூரப்பா திணறி வருகிறார். இதுபற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும்போது எல்லாம், மத்திய அரசு நிதி உதவி விரைவில் வழங்கும் என்று எடியூரப்பா கூறி பதிலளித்து, சமாளித்து வருகிறார். இந்த விஷயத்தில் மத்திய அரசு மீது எடியூரப்பா கடும் அதிருப்தியில் உள்ளார்.

இப்படி ஒவ்வொரு நிலையிலும் எடியூரப்பாவை பா.ஜனதா சிறிது சிறிதாக ஓரங்கட்டி வருவதாக கூறப்படுகிறது. சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு டிக்கெட் வழங்க எடியூரப்பா முடிவு செய்துள்ளார். ஆனால் பா.ஜனதாவில் ஒரு அணி, பா.ஜனதாவுக்காக உழைத்த நிர்வாகிகளுக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று கூறி வருகிறது.

ஒருவேளை தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் வழங்காவிட்டால், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யவும் தயங்க மாட்டேன் என்று எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News