செய்திகள்
ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கு ஏழு நாட்கள் விடுமுறை? வைரல் பதிவுகளை நம்பலாமா?

Published On 2019-09-26 06:55 GMT   |   Update On 2019-09-26 09:09 GMT
வங்கிகளுக்கு தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும் என்பதால் ஏ.டி.எம். மையங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்படலாம் என தகவல் பரவுகிறது.



இந்தியாவில் இன்று (செப்டம்பர் 26) துவங்கி அக்டோபர் 2 ஆம் தேதி வரை வங்கிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவுகிறது. சிலர் நீண்ட விடுமுறை நாட்கள் என்பதால் ஏ.டி.எம். மையங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்படலாம். பயனர்கள் முன்கூட்டியே பணத்தை எடுத்து வைத்துக் கொள்வது நல்லது என தெரிவித்து வருகின்றனர்.

வங்கி விடுமுறை குறித்த பதிவுகள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் அதிகமாக பகிரப்படுகிறது. வங்கி விடுமுறை குறித்து வைரலாகும் பதிவுகளில் செப்டம்பர் 26, 27 தேதிகளில் வங்கி வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 28 ஆம் தேதி மாதத்தின் நான்காவது சனிக்கிழமை. செப்டம்பர் 29 ஞாயிற்றுக் கிழமை, 30 ஆம் தேதி அரையாண்டு விடுமுறை, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி என்பதால் வங்கிகளில் வழக்கமான பணிகளில் தொய்வு ஏற்படலாம். இதனால் தேவையான தொகையை முன்கூட்டியே ஏ.டி.எம்.களில் இருந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.  



இத்தனை வதந்திகளுக்கு காரணம் வங்கி அதிகாரிகளின் வேலை நிறுத்த அறிவிப்பு தான் எனலாம். எனினும், வேலை நிறுத்தத்தை வங்கி அதிகாரிகள் திரும்ப பெற்றுவிட்டனர். இதனால் செப்டம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் வங்கிகள் வழக்கம் போல் இயங்கும். செப்டம்பர் 28 மாதத்தின் நான்காவது சனிக்கிழமை, செப்டம்பர் 29 ஞாயிற்றுக் கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை.

ஆனால் செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆம் தேதி வங்கி விடுமுறையில்லை. ரிசர்வ் வங்கியின் வங்கிகளுக்கான விடுமுறை தின அட்டவணையில் செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆம் தேதி விடுமுறை என குறிப்பிடப்படவில்லை. எனினும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.

அந்த வகையில் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 வரை வங்கிகள் வழக்கம்போல் இயங்காது என சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என்பது தெளிவாகியுள்ளது. வங்கிகள் வழக்கம் போல் இயங்கும் பட்சத்தில் ஏ.டி.எம். மையங்களில் பணம் இருப்பு குறையாது என்றே எதிர்பார்க்கலாம்.

இதுபோன்று வைரலாகும் தகவல்களின் உண்மைத்தன்மையை அறியாமல் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதே நல்லது. சமூக வலைத்தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளும் முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது வீண் குழப்பத்தை தவிர்க்க உதவும்.
Tags:    

Similar News