செய்திகள்
ஏர்பஸ் ஏ380

பிறந்த நாளுக்கு விமானங்களை பரிசளித்த பாசக்கார தந்தை

Published On 2019-09-09 08:11 GMT   |   Update On 2019-09-09 08:11 GMT
சவுதியில் மகனின் பிறந்த நாளுக்கு தந்தை இரண்டு விமானங்களை பரிசளித்தாக வைரலாகும் தகவலின் உண்மை பின்னணியை பார்ப்போம்.



சவுதியை சேர்ந்த தந்தை ஒருவர் தன் மகனின் பிறந்தநாளுக்கு ரூ. 2600 கோடி மதிப்பிலான 2 ஏர்பஸ் விமானங்களை வாங்கித்தந்துள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

சவுதி அரேபியாவில் தொழிலதிபர் ஒருவர் தனது மகனின் பிறந்தநாளுக்கு பரிசு வாங்கி தர முடிவு செய்திருந்தார். தனது மகனுக்கு விமானங்கள் என்றால் பிரியம் என்பதால் அவர் விமான பொம்மைகளை வாங்க ஏர்பஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டார். அவருக்கு ஆங்கிலம் தெரியாததால் ஏர்பஸ் நிறுவனத்தினரிடம் சரியாக உரையாட முடியவில்லை. 

ஏர்பஸ் நிறுவனத்தினர் அவர் உண்மையான 2 விமானங்களை வாங்க தங்களை அழைத்துள்ளார் என்று எண்ணி அவரிடம் விமானத்தின் மாடல், வெளிப்புறம் மற்றும் உள்புறத்தின் வடிவமைப்பை பற்றி கேட்டுள்ளனர். அவரோ ஆங்கிலம் புரியாததால் ஏர்பஸ் நிறுவனம்  துல்லியமாக பொம்மை செய்ய தான் கேட்கிறார்களோ என்று எண்ணி இருக்கிறார்.

பின் அவர் பொம்மை என்று நினைத்து உண்மையான 2 ஏர்பஸ் A350-1000 ரக விமானங்களை ஆர்டர் செய்துள்ளார். 329 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 2600 கோடி) மதிப்பிலான அந்த இரு விமானிகளுக்கு தன் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு மூலம் பணம் செலுத்தியுள்ளார். அந்த பொம்மை மாடலுக்கு அந்த பணம் கொஞ்சம் அதிகம் என்றாலும் அது நியமானது என்று அவர் எண்ணியுள்ளார். 



பணம் செலுத்திய சில நாட்கள் கழித்து ஏர்பஸ் நிறுவனம் விமானங்கள் தயாரான பின்பு அவரை அழைத்து யார் இந்த விமானங்களை ஓட்டப்போவது என்று அவரிடம் கேட்டுள்ளனர். முதலில் ஏர்பஸ் நிறுவனம் நகைச்சுவைக்காக கேட்பதாக நினைத்த சவுதி தந்தைக்கு, பொம்மை மாடலுக்கு பதிலாக உண்மையான 2 விமானங்களை வங்கியுள்ளோம் என்று பிறகு தான் புரிந்தது.

பின்னர் அவர் அந்த 2 விமானங்களில் ஒன்றை தன் மகனுக்கு பரிசாக கொடுத்துவிட்டு மற்றொன்றை தன் உறவினருக்கு கொடுத்தார். இதனை தொடர்ந்து தற்போது இந்த செய்தி பெரும் வைரல் ஆகியுள்ளது. மேலும் இவ்வளவு விலையுயர்ந்த பிறந்தநாள் பரிசை தந்த ஒரே தந்தை இவராக தான் இருப்பார் என்றும் சிலர் தெரிவித்து வருகின்றனர். 

உண்மையில் இந்த செய்தி உண்மையில்லை என தற்போது தெரிய வந்துள்ளது. இந்த செய்தியை தின் ஏர் டுடே (Thin Air Today)  என்ற செய்தி நிறுவனம் முதன்முதலில் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் விமானப் பயணம் குறித்து வேடிக்கையான செய்திகளை உருவாக்கி எழுதும் ஒரு தளமாகும். இந்த செய்தியையும் அப்படிதான் அவர்கள் பொய்யாக எழுதியது தெரிய வந்துள்ளது.

பாசக்கார தந்தையை புகழும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில், இது முற்றிலும் பொய் என தற்சமயம் உறுதியாகியுள்ளது. போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளில் பலர் பாதிக்கப்படுகின்றனர். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.
Tags:    

Similar News