செய்திகள்
கோப்புப்படம்

இளைஞர்களிடையே பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்க சமூக வலைதளத்தை பயன்படுத்தும் பாகிஸ்தான்

Published On 2019-09-06 15:00 GMT   |   Update On 2019-09-06 15:00 GMT
சமூக வலைதளங்கள் மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களுக்கு பயங்கரவாத எண்ணத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதாக ஜம்மு-காஷ்மீர் போலீஸ் ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்:

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு கடந்த மாதம் 5-ம் தேதி ரத்து செய்ததையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டு 33 நாட்கள் ஆன பிறகும் காஷ்மீரின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தற்போதுவரை அமலில் உள்ளது. 

இதனால் கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாகிஸ்தான் ராணுவத்தினரும், அந்நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களும், இந்திய நிலைகளை குறிவைத்து அவ்வப்போது துப்பாக்கிச் சண்டை நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்துவருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் போலீஸ் ஆணையர் தில்பக் சிங் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வருகிறது. பாகிஸ்தான் ராணுவ தளங்களில் மிகப்பெரிய அளவிலான பயங்கரவாத குழுக்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவதற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். 



மேலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கும் இளைஞர்களை சமூக வலைதளங்கள் மூலம் மூளைச்சலவை செய்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது. இளைஞர்கள் தவறான வழியில் செல்லாமல் தடுப்பது மிகவும் சவாலானது. இந்த சவாலான செயலை ராணுவத்துடன் இணைந்து ஜம்மு காஷ்மீர் போலீசார் திறம்பட கையாண்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News