செய்திகள்
அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவம்.

அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கம்- கையேடு விற்பனை செய்த மார்க்சிஸ்ட் தலைவர் மீது வழக்கு

Published On 2019-09-05 04:00 GMT   |   Update On 2019-09-05 04:00 GMT
அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கம் தொடர்பாக போராட்டக் களத்தில் கையேடு விற்பனை செய்த மார்க்சிஸ்ட் தலைவர் மீது மத்திய பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
குவாலியர்:

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த மாதம் ரத்து செய்தது. அத்துடன், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்துள்ளது. இந்த நடவடிக்கையை சில அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய வலியுறுத்தி முஸ்லிம் அமைப்பு சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கம் மற்றும் அந்த சட்டத்தின் முக்கியத்துவம் குறித்த சிறு கையேடு விற்பனை செய்யப்பட்டது. இதில் கலவரத்தை தூண்டும் வகையிலான அம்சங்கள் இடம்பெற்றிருந்தாக காவல்துறைக்கு புகார் வந்துள்ளது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த கையேடு விற்பனையை தடுத்துநிறுத்தினர். கையேடு விற்பனை செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஷேக் கனியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கலவரத்தை தூண்டும் வகையிலான கையேட்டை விற்பனை செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கையேட்டை எழுதியவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில  செயலாளர் ஜஸ்வீந்தர்சிங். கையேடு விற்பனை தொடர்பான புகார் வந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த கையெட்டில் ஆட்சேபனைக்குரிய வகையில் எந்த கருத்தும் இடம்பெறவில்லை என விளக்கம் அளித்தார்.
Tags:    

Similar News