செய்திகள்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

பொருளாதாரத்தை மீட்டெடுங்கள் என கூறிய மன்மோகன் சிங்குக்கு மத்திய அரசு பதிலடி

Published On 2019-09-03 22:06 GMT   |   Update On 2019-09-03 22:06 GMT
பழி வாங்குவதை கைவிட்டு, பொருளாதாரத்தை மீட்டெடுங்கள் என மன்மோகன் சிங் கூறியதற்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது. பொருளாதாரத்தை எப்படி கையாள்வது என்று உங்களிடம் கேட்கவில்லை என கூறி உள்ளது.
புதுடெல்லி:

நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. நாட்டின் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி பெரும் சரிவை சந்தித்து உள்ளது.

இதையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மன்மோகன் சிங் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில் அவர், “நாட்டின் இன்றைய பொருளாதார நிலை கவலை அளிப்பதாக இருக்கிறது. கடந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சிவீதம் 5 சதவீதம்தான் என்பது, நாம் நீண்ட பொருளாதார மந்த நிலையின் மத்தியில் இருக்கிறோம் என்பதற்கான அடையாளம் ஆகும். இந்தியா அதிவேகமாக பொருளாதார வளர்ச்சி காண்பதற்கான வளத்தைப் பெற்ற நாடு. ஆனால், மோடி அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள தவறான நிர்வாகம்தான் இந்த மந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது” என கூறி இருந்தார்.

அத்துடன், “மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த நெருக்கடியில் இருந்து நமது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு பழிவாங்கும் அரசியலை கைவிட்டு, அனைத்து விவேகமான குரல்களையும், சிந்தனைகளையும் உடைய நபர்களை அரசு நாட வேண்டும்” எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தை தொடர்ந்து அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை நிருபர்களுக்கு தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் விளக்கினார்.

அப்போது அவரிடம், பொருளாதார மந்த நிலை தொடர்பாக மன்மோகன் சிங் தெரிவித்த கருத்துகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் மன்மோகன் சிங்குக்கு பதிலடி கொடுக்கிற வகையில் கூறியதாவது:-

பொருளாதாரத்தை எப்படி கையாளலாம் என மன்மோகன் சிங்கிடம் நாங்கள் கேட்கவில்லை.

உலகின் 11-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருந்தது.

இப்போது இந்தியா 5-வது பெரிய பொருளாதார நாடாக இருக்கிறது. நாங்கள் 3-வது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை அடைய நடைபோடுகிறோம்.

இந்திய பொருளாதாரத்தை நாங்கள் துண்டு துண்டாக பார்க்கவில்லை. விரிவாகவே பார்க்கிறோம்.

‘பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிறோம்’

நாங்கள் என்ன செய்கிறோம்? பதில் அளிக்கக்கூடிய அரசாக இருக்கிறோம். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிறோம். சரக்கு, சேவை வரிகள் விஷயத்திலும் இதைச் செய்திருக்கிறோம்.

சரக்கு, சேவை வரி கவுன்சில் ஒவ்வொரு மாதமும் கூடுகிறது. பொருத்தமான முடிவுகளை எடுக்கிறது. இப்போது அது நேர்த்தியாகி இருக்கிறது. எனவே அந்த வகையில் மக்களுக்கு உகந்த விதத்தில் செயல்படுகிற அரசாக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News