செய்திகள்
கற்களை வீசி தாக்குதல் நடத்தும் போராட்டக்காரர்கள் (கோப்பு படம்)

காஷ்மீரில் கல்வீச்சு தாக்குதல்... ராணுவ வீரர் என நினைத்து டிரக் டிரைவரை கொன்ற கும்பல்

Published On 2019-08-26 03:15 GMT   |   Update On 2019-08-26 03:15 GMT
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர் என நினைத்து டிரக் டிரைவரை, போராட்டக் கும்பல் கற்களை வீசி தாக்கிக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே, கூடுதல் ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஆங்காங்கே போராட்டங்களும், கல்வீச்சு தாக்குதல்களும் நடக்கின்றன.

இந்நிலையில், நேற்று இரவு 8 மணியளவில் தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெராவில் ஒரு டிரக் சென்றுகொண்டிருந்தது. அப்போது, அந்த டிரக் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி கடுமையாக தாக்குதல் நடத்தினர். இதில் அந்த டிரக் டிரைவர் படுகாயமடைந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விசாரணையில் அவர் ஜிராதிபோரா உரன்ஹால் பகுதியைச் சேர்ந்த நூர் முகமது என்பது தெரியவந்தது. ராணுவ வாகனம் என நினைத்து அவரது வாகனம்  மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், இந்த தாக்குதல் தொடர்பாக ஒருவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News