செய்திகள்
சந்திராயன் 2 விண்கலம் ஏவப்பட்ட காட்சி

நிலவின் வட்டப்பாதைக்குள் நாளை செல்கிறது சந்திரயான்-2

Published On 2019-08-19 11:47 GMT   |   Update On 2019-08-19 11:47 GMT
சந்திரயான்-2 விண்கலம் நிலவின் வட்டப்பாதைக்குள் செல்வதற்காக அதன் திரவ என்ஜினை நாளை செயல்படுத்த இஸ்ரோ தயாராக உள்ளது.

பெங்களூர்:

நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடம் 24 வினாடிகளில் விண்கலத்தை ராக்கெட் குறிப்பிட்ட இலக்கில் கொண்டு போய் சேர்த்தது. 

அப்போது ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம் பூமிக்கு அருகே குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 45,475 கி.மீ. தொலைவிலும் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றி வந்தது. அதன்பின்னர் ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை சந்திரயானின் சுற்றுப்பாதை படிப்படியாக 5 முறை அதிகரிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. 

இவ்வாறு சந்திரயான்-2 நீள்வட்ட பாதையில் தனது வேகத்தை அதிகரித்து பூமியைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து தூரமாக சென்ற நிலையில், கடந்த ஆகஸ்ட் 14ம் நாள் அதிகாலை 2.21 மணிக்கு 6-வது முறையாக சுற்றுவட்டப் பாதை மாற்றப்பட்டு நிலவை நோக்கி வெற்றிகரமாக திசை மாற்றப்பட்டது. 



நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கிய சந்திராயன்-2  விண்கலத்தை நாளை நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சந்திராயனின் திரவ என்ஜின் நாளை இயக்கப்பட உள்ளது. இது மிகவும் சவாலான நகர்வு ஆகும்.

இது குறித்து, இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், ‘நாளை காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை திரவ என்ஜின் இயக்கப்பட உள்ளது. இது மிக முக்கிய தருணமாகும்’ என்றார்.

“நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் விண்கலம் சென்ற பிறகு, 4 முறை அதன் சுற்றுப்பாதை மாற்றப்படும். அப்போது நிலவின் மேற்பரப்பில் இருந்து 100 கி.மீ தொலைவில் விண்கலம் சுற்றும். அதன்பின்னர் சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் செப்டம்பர் 2-ம் தேதி பிரியும். அந்த லேண்டரின் சுற்றுப்பாதையானது இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டு அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்படும். பின்னர் செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் மெதுவாக தரையிறங்கும்” என இஸ்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News