செய்திகள்
டிக் டாக் -பப்ஜி

பப்ஜி, டிக் டாக் செயலிகளை தரவிறக்கம் செய்ய வேண்டாம் -கோவா முதல்வர்

Published On 2019-08-06 08:03 GMT   |   Update On 2019-08-06 08:03 GMT
பப்ஜி மற்றும் டிக் டாக் செயலிகளை குழந்தைகள் தரவிறக்கம் செய்ய வேண்டாம் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.
பனாஜி:

இளைஞர்கள், இளம் பெண்களின் மத்தியில் பப்ஜி கேம் வைரலாக பரவி வருகிறது. இதுவரை வெளிவந்த மொபைல் 'கேம்'களிலேயே உயர் தொழில்நுட்பம், கிராபிக்ஸ் காட்சிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கல்லூரி பெண்கள் மத்தியில் 'பப்ஜி' விளையாட்டு மோகம் அதிகரித்துள்ளது. இது அவர்களின் நேரத்தை வீணடித்து அந்த விளையாட்டிற்கு அடிமைகளாகவும் உருவாக்குகிறது. கேம் விளையாடுவதை தடுத்தால் அவர்களுக்கு கட்டுப்படுத்த முடியாத கோபம் ஏற்பட்டு விபரீதத்தில் முடிகிறது. இந்த கேம் பல உயிர்களை காவு வாங்கி உள்ளது.

அவ்வகையில் கடந்த மே மாதம் மத்திய பிரதேச மாநிலத்தில், தொடர்ந்து 6 மணி நேரம் பப்ஜி கேம் விளையாடிய 12ம் வகுப்பு மாணவன், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து மும்பையில் வாலிபர் ஒருவர் பப்ஜி விளையாடுவதற்கு செல்போன் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால், தற்கொலை செய்தார். இத்தனை பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த கேமுக்கு ஏற்கனவே ஈராக், நேபாளம் ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன.

அருணாசல பிரதேசத்திலும் பெற்றோர்கள் பப்ஜி குறித்து புகார் அளித்த நிலையில், அம்மாநில அரசு பப்ஜியை தடை செய்யலாமா? என தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.



இது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும், மாநில தொழில்நுட்ப துறையிடமும் ஆலோசனை கேட்டுள்ளது. இதே அளவில் டிக் டாக் செயலியும் மக்களை ஈர்த்து பல மோசமான விளைவுகளை சந்திக்க வைக்கிறது.

இந்நிலையில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் மாணவர்களிடையே பப்ஜி மற்றும் டிக் டாக் செயலிகளை பயன்படுத்தும் ஆர்வத்தை குறைக்க நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார். கல்வி இயக்குநரகம் மூலமாக பெற்றோர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இது குறித்து பிரமோத் கூறுகையில், ‘பப்ஜி, டிக் டாக்கினால் அதிக மோசமான விளைவுகள் ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் இந்த செயலிகளை  தரவிறக்கம் செய்ய வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயலிகளால் அவர்கள் மனதளவிலும், உடல் அளவிலும் பாதி்க்கப்படுகின்றனர். இவற்றை விரிவாக குறிப்பிட்டு பெற்றோர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என கூறினார். 
Tags:    

Similar News