செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

உன்னாவ் பாலியல் விவகாரம்: வழக்குகள் டெல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் - சுப்ரீம் கோர்ட்

Published On 2019-08-01 09:52 GMT   |   Update On 2019-08-01 09:52 GMT
உன்னாவ் பாலியல் விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
புது டெல்லி:

உன்னாவ் பாலியல் விவகாரம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு முன்பு ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,  விசாரணை அதிகாரிகள் லக்னோவில் உள்ளதால், மதியம் 12மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைக்குமாறு கோரினார். இதை நிராகரித்த தலைமை நீதிபதி அமர்வு, தொலைபேசி மூலம் விசாரணை அதிகாரியிடம் தகவல் பெற்று நீதிமன்றத்தில் 12 மணிக்கு தெரிவிக்குமாறு சிபிஐ இயக்குநருக்கு உத்தரவிட்டது.



அதன்படி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ இயக்குநர் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது விசாரணையை முடிக்க 30 நாட்கள் கால அவகாசம் தேவை என சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் 7 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க சிபிஐக்கு உத்தரவிட்டனர். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் வழக்கறிஞரை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றுவது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை பிற்பகல் 2 மணிக்கு ஒத்தி வைத்தனர்.

மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இதில் தலைமை நீதிபதி, 'உன்னாவ் பாலியல் வழக்குகள் அனைத்தும் உ.பி.யில் இருந்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது. 45 நாட்களுக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும்.

உன்னாவ் பெண்ணின் வழக்கறிஞர், உடன் பிறந்தவர்கள் என குடும்பத்தினர் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கான இடைக்கால இழப்பீடாக உத்தரபிரதேச மாநில அரசு, ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்' எனவும் உத்தரவிட்டார்.



Tags:    

Similar News