செய்திகள்
குமாரசாமி

எடியூரப்பா அரசு நீடிக்காது - குமாரசாமி

Published On 2019-07-24 06:46 GMT   |   Update On 2019-07-24 06:46 GMT
எடியூரப்பா அரசாங்கம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதையும் பார்ப்போம் என குமாரசாமி கூறியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடப்பதற்கு முன்பாக முதல்-மந்திரி குமாரசாமி நீண்ட உரை நிகழ்த்தினார்.

அப்போது குறுகிய கால தனது ஆட்சியில் பல்வேறு சாதனைகளை செய்திருப்பதாக குறிப்பிட்ட அவர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறிய குற்றச்சாட்டுக்கு விளக்கமான பதில்களை அளித்தார்.

எங்களது 14 மாத ஆட்சியில் இதுவரை யாரும் சாதிக்காததை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். நான் இந்த பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்பவில்லை. ஆனாலும் பாரதிய ஜனதா கட்சி இதில் எப்படி நடந்து கொண்டுள்ளது என்பதை பார்க்க வேண்டும்.அவர்கள் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கினார்கள்.

சபை நடவடிக்கைகளை நாங்கள் 4 நாட்களாக இழுத்தடித்து தாமதப்படுத்தி இருக்கலாம். இதில் எங்களுடைய சுயலாப எண்ணமும் இருந்து இருக்கலாம். ஆனால் மக்கள் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், அவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தான் கூட்டத்தை தொடர்ந்தோம்.

எனது தந்தை முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை பற்றி சிலர் இங்கு விமர்சித்து பேசினார்கள். அவர் ஜனநாயகத்தை சீர்குலைக்க சதி செய்ததாக குற்றம் சாட்டினார்கள். தேவேகவுடா எந்த கட்சியின் நிழலிலோ அல்லது தனி நபரின் நிழலிலோ வளரவில்லை. அவரைப்பற்றி தேவையற்ற விமர்சனங்கள் வேண்டாம்.அவர் என்னுடைய தந்தை என்பதால் மட்டும் சொல்ல வில்லை. அவர் எப்போதும் தன்னை விவசாயியின் தந்தை என்று அடையாளப்படுத்திக் கொண்டவர்.


இப்போது அதிருப்தியில் வெளியேறி உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலர் தங்கள் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் மற்ற தொகுதிகளை ஒப்பிடும் போது அவர்கள் தொகுதிக்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரமேஷ் ஜர்கிகோலி தொகுதிக்கு ரூ.260 கோடியும், மகேஷ் குமத்தல்லி தொகுதிக்கு ரூ. 157 கோடியும், ஆனந்த் சிங் தொகுதிக்கு ரூ. 175 கோடியும், சுதாகர் தொகுதிக்கு ரூ.136 கோடியும், பி.சி. பாட்டில் தொகுதிக்கு ரூ.147 கோடியும், கோபலய்யா தொகுதிக்கு ரூ.442 கோடியும், விஸ்வநாத் தொகுதிக்கு ரூ. 304 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

குடகு பகுதியில் வெள்ளம் ஏற்பட்டபோது நாங்கள் ஏராளமான உதவிகளை செய்தோம். மத்திய அரசின் உதவி கிடைக்குமா? என்று கூட எதிர்பார்க்காமல் 2 முறை சிறப்பு நிதியை வழங்கினோம்.

வீடு இழந்தோருக்கெல்லாம் வீடு கட்டி கொடுத்தோம். முதல்-மந்திரியின் நிவாரண நிதியில் இருந்து ரூ.100 கோடி வரை உதவி செய்யப்பட்டது. ஆனால் குடகு பகுதி எம்.எல்.ஏ.க்கள் கூட எங்களுக்கு ஆதரவாக இல்லை.

பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், ஊடகங்கள் என எங்களுக்கு எதிராக நடந்து கொண்டார்கள்.

இன்று சில எம்.எல்.ஏ.க் களை கூடுதலாக பெற்று தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கலாம். ஆனால் ஆட்சி அமைத்து ஒரு வாரத்தில் உங்களுக்கு (எடியூரப்பா) என்ன நேரிடும் என்பதை பார்ப்போம். உங்கள் அரசாங்கம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதையும் பார்ப்போம்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

Tags:    

Similar News