செய்திகள்
மீட்பு பணியில் வீரர்கள்

இமாச்சலப்பிரதேசத்தில் ‘தாபா’ இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

Published On 2019-07-15 08:46 GMT   |   Update On 2019-07-15 08:46 GMT
இமாச்சலப்பிரதேசம் மாநிலம், சோலான் மாவட்டத்தில் உணவகம் இடிந்து விழுந்த விபத்தின் இடிபாடுகளில் இருந்து 13 சடலங்கள் மீட்கப்பட்டன.
சிம்லா:

இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் சோலான் மாவட்டத்தில் குமார்ஹட்டி என்ற பகுதி அமைந்துள்ளது. மலைப்பாங்கான இப்பகுதியில் பிரபல ‘தாபா’ (உணவகம்) ஒன்று இயங்கி வந்தது. இந்த தாபாவுக்கு ஏராளமான ராணுவ வீரர்கள் நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அருகாமையில் உள்ள தாக்சாய் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் இருந்து 30 இளநிலை அதிகாரிகள் உள்பட 35-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் ஒரு லாரியில் அங்கு வந்தனர்.

அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக பேசியவாறு உணவருந்தியபோது உணவகம் அமைந்திருந்த 4 மாடி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ராணுவ வீரர்கள் உள்பட சுமார் 50 பேர் இடிபாடுகளில் சிக்கியதாக நேற்றிரவு தகவல் வெளியானது.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப்படையினர் நேற்றிரவு இரு சடலங்கள் மற்றும் சுமார் 20 பேரை உயிருடன் மீட்டனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்றைய நிலவரப்படி 12 ராணுவத்தினர் உள்பட 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 28 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இமாச்சலப்பிரதேசம் மாநில முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் சம்பவ இடத்தை இன்று பார்வையிட்டு, இவ்விபத்து தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. 
Tags:    

Similar News