செய்திகள்
வெடிகுண்டு மிரட்டல்

ஐதராபாத் விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி பரப்பிய சென்னை வாலிபர் கைது

Published On 2019-07-07 06:56 GMT   |   Update On 2019-07-07 06:56 GMT
ஐதராபாத் விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி பரப்பிய சென்னை வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐதராபாத்:

சென்னையை சேர்ந்தவர் கே.வி.விஸ்வநாதன் (வயது24). தெலுங்கானா மாநிலம் செகந்திரா பாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதி நிதியாக பணியாற்றி வருகிறார்.

இவர் சென்னை வருவதற்காக நேற்று அதிகாலை 1.30 மணிக்கு ஐதராபாத் விமான நிலையத்தில் காத்திருந்தார். குடிபோதையில் இருந்த அவர் திடீரென்று பாதுகாப்பு அதிகாரியிடம் சென்று நான் சென்னை செல்ல இருக்கும் விமானத்திலும், மற்றொரு விமானத்திலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்தது என்று கூறினார்.

இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 விமானங்களிலும் தீவிர சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்று தெரிய வந்தது. இதையடுத்து விஸ்வநாதனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர் காலை 8 மணிக்கு புறப்படும் விமானத்துக்காக அதிகாலை 1.30 மணிக்கே வந்து காத்திருந்தது தெரிய வந்தது. காலை வரை அவர் அங்குள்ள பாரில் இருந்தார். பின்னர் காலை 6.30 மணிக்கு வெடிகுண்டு புரளியை கிளப்பினார்.

காதல் தோல்வி காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்தார். இதனால் குடிபோதையில் அவர் வெடிகுண்டு புரளி பரப்பியது தெரிய வந்தது.

உறுப்பினர் சேர்க்கை தொடர்பான நிகழ்ச்சிக்காக பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நேற்று பிற்பகல் ஐதராபாத் வந்தார். அவர் வருவதற்கு முன்பு வெடிகுண்டு புரளி கிளப்பப்பட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வெடிகுண்டு புரளி மற்றும் சோதனை நடவடிக்கையால் விமான சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Tags:    

Similar News