செய்திகள்
நிர்மலா சீதாராமன்

பண மதிப்பு இழப்பு இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை- நிர்மலா சீதாராமன்

Published On 2019-07-03 01:42 GMT   |   Update On 2019-07-03 01:42 GMT
பண மதிப்பு இழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.
புதுடெல்லி :

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் பல்வேறு துணை கேள்விகளுக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கும்போது கூறியதாவது:-

அரசு பொருளாதார வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை அதிகரிக்க பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில துறைகளில் நிலவும் குறைவான வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி விகிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக வேளாண்மை மற்றும் அதன்சார்ந்த தொழில்கள், நிதி, ரியல் எஸ்டேட், தொழில்முறை சேவைகள் போன்றவை சரிந்துள்ளது. வேளாண்மைத் துறை உற்பத்தியில் 0.6 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த துறைகளின் உற்பத்தி குறைவால் ஏற்பட்ட தாக்கம் தான் குறைந்த வளர்ச்சிக்கு காரணம். உற்பத்தி துறை குறிப்பிட்ட சரிவை சந்தித்துள்ளது. ஆனால் இதற்கு காரணம் பண மதிப்பு இழப்பு நடவடிக்கை அல்ல.



கடைசி காலாண்டில் சரிவு உள்ளது. பொருளாதார நிலையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் நாம் தொடர்ந்து பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவரும் நாடாக இருக்கிறோம். கடந்த 4 ஆண்டுகளில் அமெரிக்காவின் வளர்ச்சி 1.6, 2.2, 2.9, 2.3 சதவீதம் எனவும், சீனாவின் வளர்ச்சி 6.7, 6.8, 6.6, 6.3 சதவீதம் எனவும் உள்ளது. ஆனால் இந்தியாவின் வளர்ச்சி கடந்த 2 ஆண்டுகளில் 7, 7.3 சதவீதம் என உள்ளது.

அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் பிரதம மந்திரி விவசாயிகள் நல நிதி திட்டம், ஓய்வூதிய திட்டம் போன்றவை மூலம் மக்களின் கைகளுக்கு அதிக பணம் நேரடியாக அவர்கள் கணக்கிற்கு செல்கிறது. இதன்மூலம் மக்கள் பலன் அடைந்து வருகிறார்கள். இதுதவிர தொழிற்சாலைகள், தொழில் முனைவோருக்கு கூடுதல் கடன் வசதி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News