செய்திகள்
அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள்

அமர்நாத் யாத்திரை- 4417 யாத்ரீகர்களுடன் இரண்டாவது குழு புறப்பட்டது

Published On 2019-07-01 04:22 GMT   |   Update On 2019-07-01 04:22 GMT
அமர்நாத் புனித யாத்திரை தொடங்கி உள்ள நிலையில், 4417 யாத்ரீகர்கள் அடங்கிய இரண்டாவது குழு இன்று அதிகாலை ஜம்முவில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். கடல்மட்டத்தில் இருந்து மூன்றாயிரத்து 880 மீட்டர் உயரத்தில் தோன்றும் இந்த பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக, பாகல்காம் மற்றும் பல்தல் ஆகிய மலைப்பாதைகள் வழியாக குகைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்கின்றனர்.
 
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான புனித யாத்திரை நேற்று தொடங்கியது. நேற்று காலை முதல் குழு ஜம்முவில் இருந்து வாகனங்களில் புறப்பட்டு சென்றது. முதல் குழுவை காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கின் ஆலோசகர் கே.கே.சர்மா கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். முதல் குழுவில் 2,200 பேர் சென்றனர்.

இந்நிலையில் 4417 யாத்ரீகர்கள் கொண்ட இரண்டாவது குழு இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்றது. பகவதிநகர் அடிவார முகாமில் உள்ள யாத்ரி நிவாசில் இருந்து இவர்கள் புறப்பட்டனர். இந்த குழுவினரில், பாரம்பரிய வழிப்பாதையான பாகல்காம் பாதை வழியாக 2321 ஆண்கள், 463 பெண்கள், 16 குழந்தைகள் என மொத்தம் 2800 பேர் குகைக்கோயில் நோக்கி பயணம் செய்கின்றனர். பல்தல் பாதை வழியாக  சாதுக்கள் உள்ளிட்ட 1222 ஆண்கள், 380 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள் என மொத்தம் 1617 பேர் பயணம் செய்கின்றனர்.



இந்த ஆண்டு 46 நாட்கள் அமர்நாத் யாத்திரை நீடிக்கும். அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு அமைதியான மற்றும் பாதுகாப்பான யாத்திரையை உறுதி செய்ய, சர்வதேச எல்லை மற்றும் எல்லைக்  கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படையினர் தீவிர எச்சரிக்கையுடன் பணியாற்றி வருகின்றனர்.
 
Tags:    

Similar News