செய்திகள்

மனம் மாறினார் மாயாவதி - இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டி என அறிவிப்பு

Published On 2019-06-24 07:07 GMT   |   Update On 2019-06-24 07:07 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்துள்ளார்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை முன்னர் ஆண்ட கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் அரசியல் களத்தில் முன்னர் எலியும் பூனையுமாக இருந்தன.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற ஒரே செயல் திட்டத்தின் அடிப்படையில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் பழைய பகைகளை எல்லாம் மறந்து கூட்டணி அமைத்து கடந்த பாராளுமன்ற தேர்தலை சந்தித்தனர்.

இந்த தேர்தலில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி வேட்பாளர்கள் 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றனர். பாஜக 62 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.

சற்றும் எதிர்பாராத இந்த படுதோல்விக்கு பின்னர் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய துணை தலைவராக மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமார், தேசிய ஒருங்கிணைப்பாளராக அவரது மருமகன் ஆகாஷ் ஆனந்த் ஆகியோர் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி இன்று அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் சமாஜ்வாதி கட்சியின்செயல்பாடுகளால் இனி அக்கட்சியால் பாஜக-வை எதிர்த்து போராட இயலாது என்பதை அறிந்து இந்த முடிவை எடுக்க நேர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News