செய்திகள்
இன்ஸ்பெக்டர் நவாஸ்

கேரளாவில் மாயமான இன்ஸ்பெக்டர் கரூரில் மீட்பு

Published On 2019-06-15 04:55 GMT   |   Update On 2019-06-15 04:55 GMT
உயர் அதிகாரிகளின் தொல்லை காரணமாக கேரளாவில் மாயமான சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கரூர் ரெயில் நிலையத்தில் மீட்கப்பட்டார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் எர்ணாகுளம் போலீஸ் நிலையத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் நவாஸ்.

நவாஸ் நேற்று முன்தினம் அதிகாலையில் பணி முடிந்து வீட்டிற்கு சென்றார். சிறிது நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற நவாஸ், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

நவாசை தொடர்பு கொள்ள முடியாத அவரது மனைவி ஆரீபா, இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார். மாயமான கணவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கூறி இருந்தார்.

போலீசார் நவாசை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது. நேற்று மாலை வரை நவாசை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி அவரது மனைவி ஆரீபா கூறும்போது, கணவருக்கு உயர் அதிகாரிகள் கடும் டார்ச்சர் கொடுத்தனர்.

அந்த அதிகாரிகள் பெயரை கணவர் என்னிடம் கூறவில்லை. ஆனால் நான், வெளியூர் செல்கிறேன், தேட வேண்டாம் என எனக்கு மெசேஜ் மட்டும் அனுப்பி உள்ளார். அவர், மாயமானதற்கு உயர் அதிகாரிகள் அளித்த டார்ச்சரே காரணம் என்று கூறினார்.

இன்ஸ்பெக்டர் நவாசின் மனைவி அளித்த பேட்டி போலீஸ் உயர் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

அவரது உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் நவாசை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதில், நவாஸ் கொல்லத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக கோவை செல்லும் பயணிகள் ரெயிலில் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து நவாசின் புகைப்படம் தமிழக ரெயில்வே போலீசாருக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் நேற்று இரவு நவாசை கரூர் ரெயில் நிலையத்தில் கண்டு பிடித்தனர். இந்த தகவல் கேரள போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கரூருக்கு வந்து நவாசை அழைத்துச் செல்ல உள்ளனர்.

Tags:    

Similar News