செய்திகள்

சமாஜ்வாடி தலைவர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

Published On 2019-06-01 07:12 GMT   |   Update On 2019-06-01 07:12 GMT
உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் நகரை சேர்ந்தவர் லால்ஜி யாதவ். சமாஜ்வாடி கட்சி தலைவர். இவர் நேற்று தனது காரில் ஜான்பூர் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தார். உட்லி கிராமம் அருகே காரை சாலையோரம் நிறுத்திவிட்டு சிலருடன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது முகமூடி அணிந்து 3 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் லால்ஜி யாதவை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பினர்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த லால்ஜி யாதவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது லால்ஜி யாதவ் அனைத்து அரசு காண்ட்ராக்ட் பணிகளையும் எடுத்து செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட லால்ஜி யாதவ் தோல்வி அடைந்தார். அவர் மீது ஏராளமான குற்றவழக்குகள் உள்ளன.

இதுபோல், நேற்று மற்றொரு சமாஜ்வாடி தலைவரான ராம்தேக் கட்டாரியா மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவர் நொய்டா அருகே தாதிரி கிராமத்தில் உள்ள தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அங்கு மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பினர்.

தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த கொலைகள் நடந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து சமாஜ்வாடி கட்சி முன்னாள் எம்.பி. பாரஸ்நாத் யாதவ் கூறும்போது, தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்ற பிறகு உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியினரை குறிவைத்து தாக்குதல் நடந்து வருகிறது.

தேர்தல் முடிந்த பிறகு சமாஜ்வாடி தலைவர்கள் விஜய் யாதவ், கம்லேஷ் வால்மீகி ஆகியோர் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர்.

தற்போது இரண்டு சமாஜ்வாடி தலைவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமேதி தொகுதியில் பா.ஜனதா மந்திரி ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுரேந்திர சிங் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News