செய்திகள்

ஒடிசாவில் புயல் நிவாரணப் பணிகளுக்கு கூடுதலாக ரூ.1000 கோடி - பிரதமர் உத்தரவு

Published On 2019-05-06 08:57 GMT   |   Update On 2019-05-06 08:57 GMT
பானி புயல் தாக்கத்தால் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை இன்று ஆய்வு செய்த பிரதமர் மோடி நிவாரணப் பணிகளுக்கு கூடுதலாக 1000 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். #PMModi #Odishacyclone #cycloneFani
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தை கடந்த 3-ம் தேதி சூறையாடிய பானி புயலால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன. பல லட்சம் ஹெக்டேர் அளவிலான விளைநிலங்களில் இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்ததுடன் ஏராளமான மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்தன.

பல்வேறு சாலைகள் மற்றும் பாலங்கள் பாதிக்கப்பட்டு போக்குவரத்து வசதியும் ஸ்தம்பித்துப் போனது. புயல், மழை மற்றும் வெள்ளம்சார்ந்த விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ள நிலையில் புயலில் கோரத்தாண்டவத்தால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் சென்று பார்வையிட்டார்.

முன் எச்சரிக்கை நடவடிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்குக்கு பாராட்டு தெரிவித்தார்.



புயல் எச்சரிக்கை அறிவிப்பு வெளியானபோது நிவாரணப் பணிகளுக்கான முன்பணமாக ஒடிசா மாநிலத்துக்கு மத்திய அரசு 381 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தது. இன்று நிவாரணப் பணிகள் தொடர்பாக முதல் மந்திரி நவீன் பட்நாயக் மற்றும் அம்மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பிரதமர் மோடி, கூடுதலாக 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.

மேலும், புயலின் தாக்கத்தால் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு மத்திய அரசு சார்பில் தலா 2 லட்சம் ரூபாய் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். #PMModi #Odishacyclone #cycloneFani
Tags:    

Similar News