செய்திகள்

நேர்த்திக்கடன் செலுத்தியபோது விபரீதம்: தராசு கொக்கி தலையில் விழுந்து சசி தரூர் படுகாயம்

Published On 2019-04-15 08:18 GMT   |   Update On 2019-04-15 09:41 GMT
மத்திய முன்னாள் மந்திரி சசி தரூர் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் இன்று துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தியபோது தராசின் கொக்கி அறுந்து தலையில் விழுந்ததால் படுகாயமடைந்தார். #ShashiTharoor #ShashiTharoorinjuried #thulabharam
திருவனந்தபுரம்:

நாடு முழுவதும் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்த இந்து மக்கள் இன்று ‘விஷு’ எனப்படும் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

அவ்வகையில், திருவனந்தபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய முன்னாள் மந்திரியுமான சசி தரூர் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள தேவி கோவிலில் தனது எடைக்கு எடை வாழைப்பழங்களை நேர்த்திக்கடனாக செலுத்தி ‘துலாபாரம்’ செலுத்த வந்திருந்தார்.

‘துலாபாரம்’ தராசின் ஒரு தட்டில் வாழைப்பழங்கள் அடுக்கி வைக்கப்பட, மற்றொரு தட்டில் சசி தரூர் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தராசு முள்ளில் மேல்பகுதியில் இருந்த கனமான இரும்பு கொக்கி சசி தரூர் தலையின் மீது வேகமாக விழுந்தது.

எதிர்பாராத இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து நிலைகுலைந்த சசி தரூர் தடுமாறியவாறு கீழே சாய்ந்தார்.



தலையில் இருந்து வேகமாக ரத்தம் வெளியேறியபடி காணப்பட்ட சசி தரூரை அவரது உறவினர்களும், காங்கிரஸ் கட்சியினரும் உடனடியாக  காரில் ஏற்றி அருகாமையில் உள்ள திருவனந்தபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவரது தலையில் ஏற்பட்ட காயத்துக்கு ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த டாக்டர்கள் அவர் நல்ல நிலையில் இருப்பதாக குறிப்பிட்டனர்.

திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருமுறை போட்டியிட்டு, வெற்றிபெற்ற சசி தரூர் மூன்றாவது முறையாக இதே தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.   #ShashiTharoor #ShashiTharoorinjuried  #thulabharam
Tags:    

Similar News