செய்திகள்

பெட்ரோல் பில் பாக்கி - ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு எரிபொருள் சப்ளை நிறுத்தம்

Published On 2019-04-05 10:50 GMT   |   Update On 2019-04-05 11:22 GMT
பழைய பாக்கியை திருப்பி செலுத்தாததால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானங்களுக்கான பெட்ரோல் வினியோகத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முற்றிலுமாக நிறுத்தி விட்டது. #JetAirways #IOCLstops #fuelsupply
புதுடெல்லி:

விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன.

இந்த தொழில் போட்டியில் கிங் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்தன. அவ்வகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

இதனால், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கி இயக்கும் பல விமானங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்த முடியாமல் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கடன் வைத்துள்ளது. 

அவ்வகையில், 119 விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் பல விமானங்களை இயக்காமல் நிறுத்தி விட்டது. நேற்றைய நிலவரப்படி இந்நிறுவனத்தின் 16 வழித்தடங்கள் மட்டுமே இயக்கத்தில் உள்ளன.

இதுதவிர, வேறுசில காரணங்களுக்காக மேலும் பல விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. போதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.

சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திக்குமுக்காடி வருகிறது. மீண்டும் தலை நிமிரும் வகையில் புத்துயிர் அளிக்க 10 ஆயிரம் கோடி ரூபாய்வரை தேவைப்படுகிறது.

இந்த நிறுவனத்தை நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் 25 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவந்த நிலையில்,  தள்ளாட்டத்தில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிதி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக ஜெட் ஏர்வேஸ் இயக்குனர் குழுமத்தின் அவசர கூட்டம் சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது.

நீண்டநேர ஆலோசனை மற்றும் விவாதத்துக்கு பிறகு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர்  தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் இவர்களுக்கு சொந்தமான 51 சதவீதம் பங்குகளை கடன் அளித்த வங்கிகளும் தனியார் நிறுவனங்களும் கைப்பற்றி, அவற்றை வேறு நபர்களுக்கு விற்று தங்களுக்கு சேர வேண்டிய தொகையை ஈடு செய்யும் பணியில் இறங்கியுள்ளது.

இதற்கிடையில், ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் நிரப்புவதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முன்னர் அனுப்பிவைத்த பெட்ரோலுக்கு செலுத்த வேண்டிய மிகப்பெரிய தொகையை இந்நிறுவனம் பாக்கி வைத்துள்ளது.

இந்நிலையில், பாக்கி தொகை வராததால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு அனுப்பும் பெட்ரோல் சப்ளையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இன்று முற்றிலுமாக நிறுத்தி விட்டது. #JetAirways #IOCLstops #fuelsupply
Tags:    

Similar News