செய்திகள்

கர்நாடகாவில் முதல்வரை கேலி செய்து வினா தயாரித்த பள்ளி ஆசிரியர் பணி நீக்கம்

Published On 2019-03-29 06:01 GMT   |   Update On 2019-03-29 06:01 GMT
கர்நாடகாவில் மாணவர்களுக்கான தேர்வில், மாநில முதல்வரை கேலி செய்யும் வகையில் வினாத்தாள் தயாரித்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். #BangloreTeacherDismissed
பெங்களூரு:

பெங்களூருவில் மவுண்ட் கார்மெல் ஆங்கில உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 200க்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர். இந்த பள்ளியில் தற்போது 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கன்னட மொழிப்பாடத் தேர்வுக்காக தயாரித்த வினாத்தாளில், ‘சரியான விடையை தேர்வு செய்க’ எனும் தலைப்பில்,  அரசியல் தலைவர்களை கேலி செய்யும் வகையில் ஒரு கேள்வி இடம்பெற்றிருந்தது.

‘விவசாயிகளின் நண்பன் யார்?
அ) மண்புழு, ஆ) முதல்வர் குமாரசாமி, இ) பாஜக தலைவர் எட்டியூரப்பா’ என அந்த கேள்வி இருந்தது.

அந்த கேள்வி இடம்பெற்றிருந்த வினாத்தாளின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து முதல்வர் குமாரசாமி மற்றும் பாஜக தலைவர் எட்டியூரப்பா ஆகியோர் குறித்த மீம்ஸ்களும் வேகமாக பரப்பப்பட்டு வருகின்றன.



இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ராகவேந்திரா கூறுகையில், ‘இந்த கேள்வித்தாள் தயாரித்த ஆசிரியரை உடனடியாக பணியில் இருந்து நீக்கி விட்டோம். பள்ளியின் தலைமைக்கு தெரியாமலேயே இந்த வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு கட்சியினரையும், அரசியலையும் ஊக்குவிக்கும் எண்ணத்தோடு பள்ளி நிர்வாகம் செயல்படவில்லை என்பதை தெளிவாக கூறிக் கொள்கிறேன்’ என்றார். #BangloreTeacherDismissed 

Tags:    

Similar News