செய்திகள்

சந்திரபாபு நாயுடுவுக்கு மனநிலை சரியில்லை - சந்திரசேகர ராவ்

Published On 2019-03-10 09:54 GMT   |   Update On 2019-03-10 09:54 GMT
சந்திரபாபு நாயுடுவுக்கு மனநிலை சரியில்லை என்று தெலுங்கானா முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். #ChandrababuNaidu #ChandrasekharRao

நகரி:

தெலுங்கானா முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தெலுங்குதேசம் கட்சி ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதந்திரத்துக்காக போராடிய கட்சி என சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியை என்.டி.ராமா ராவ் நிறுவியது எப்போது? ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதந்திர போராட்டம் நடத்தியது எப்போது? சந்திரபாபு நாயுடுவிற்கு தோல்வி பயத்தில் என்ன பேசுகிறோம் என்கிற உணர்வே இல்லை.

மோடியுடன் கைகோர்த்து கடந்த தேர்தலில் போட்டியிட்டு அமைச்சரவையிலும் பங்கேற்று நான்கு ஆண்டுகள் மோடியை இந்த உலகிலேயே இப்படிப்பட்ட தலைசிறந்த பிரதமர் இல்லை என சட்டமன்றத்திலேயே பாராட்டி பேசினார்.

இப்போது மோதல் வந்ததும் மோடி ஆந்திராவிற்கு துரோகம் செய்து விட்டார். அவர் அரசியலில் என்னைவிட ஜூனியர். அவருக்கு முன் ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே நான் ஆந்திர முதல்வராகிவிட்டேன் என்றெல்லாம் பேசி வருகிறார். அதுமட்டுமின்றி மோடியுடன் எனக்கு மறைமுக தொடர்பு இருப்பதாக கூறிவருகிறார்.

நான் எதுவாக இருந்தாலும் நேரில் மனதில் பட்டதை தைரியமாக சொல்பவன். இவரை போல மாமனாரின் முதுகில் குத்தி அவரது ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றவில்லை. சுயமாக கட்சி தொடங்கி தனிமாநில கோரிக்கையை முன் வைத்து சாவின் விளிம்புவரை சென்று தனித் தெலுங்கானா சாதித்தேன். 400 ஆண்டுகளுக்கு முன்னரே நிஜாம் மன்னர்கள் உருவாக்கிய ஐதராபாத் நகரத்தை தான் கட்டினேன் என்கிறார். அவருக்கு மனநிலை சரியில்லை. ஒரு ஐடெக்கட்டிடத்தை கட்டினால் நகரத்தையே கட்டியதுபோல் ஆகிவிடுமா?

நாங்கள் தனித்து நின்று இருமுறை ஆட்சியை பிடித்துள்ளோம். என்.டி.ராமராவிடம் இருந்து கட்சியை கைப்பற்றிய பிறகு சந்திரபாபு நாயுடு எந்த ஒரு தேர்தலையாவது கூட்டணி கட்சிகளின் உதவியின்றி சந்தித்ததுண்டா?

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று இவர் சொன்னால் மக்கள் தலையிட வேண்டும். மீறி போராடியவர்களை இவர் சிறையில் அடைத்தார். இப்போது மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என இவர் போராடுவாராம். மக்கள் இவர் பின்னால் வர வேண்டுமாம். ஆந்திராவில் இவர் கட்சியினரின் ஊழல் அம்பலமாகிவிட்டது. மக்கள் இவரை வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்து விட்டனர்.

இனி தன்னை மக்கள் நம்பமாட்டார்கள் என்பதை புரிந்துகொண்டு நாங்கள் ஜெகன்மோகன் ரெட்டியை வெற்றிபெறச் செய்ய உதவுவதாக எங்கள் மீதும் குற்றம் சுமத்தி வருகிறார். பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க மட்டுமே ஜெகன்மோகன் ரெட்டியை எனது மகன் சந்தித்து பேசினார். இன்னும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது.

ஆந்திர மாநிலத்துக்கு யார் சிறப்பு அந்தஸ்து வழங்கினாலும் அவர்களுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை நாங்களும் ஆதரிக்கிறோம். தெலுங்கு மாநிலங்கள் இரண்டான போதிலும் தெலுங்கு மக்களாக சேர்ந்தே இருக்க வேண்டும் என்பதே எங்களின் கருத்து.

இவ்வாறு அவர் கூறினார். #ChandrababuNaidu #ChandrasekharRao

Tags:    

Similar News