செய்திகள்

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல் ஆதாரங்கள் - இந்திய விமானப்படை மத்திய அரசிடம் வழங்கியது

Published On 2019-03-06 22:08 GMT   |   Update On 2019-03-06 22:08 GMT
பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை இந்திய விமானப்படை மத்திய அரசிடம் வழங்கியது. #Pakistan #BalakotAirstrike #IAF
புதுடெல்லி:

காஷ்மீர் புல்வாமாவில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை கடந்த மாதம் 26-ந் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாலகோட் என்ற இடத்தில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தினரின் முகாம்கள் மீது குண்டுகளை வீசின.

இந்த தாக்குதல் தொடர்பான உண்மைத்தன்மையை வெளியிட வேண்டும் என்று சில எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. சில ஊடகங்களில் குண்டுகள் இலக்கை தாக்காமல் தவறிவிட்டதாகவும் செய்திகள் வெளியானது.



பாகிஸ்தானும் இந்தியாவின் தாக்குதலை ‘சுற்றுச்சூழலுக்கு எதிரான பயங்கரவாதம்’ என்றது. இந்திய போர் விமானங்கள் இலக்கை தாக்கவில்லை, மலை மற்றும் வனப்பகுதியில் குண்டுகள் வீசி பைன் மரங்களையும், வனப்பகுதியையும் சேதப்படுத்திவிட்டதாக கூறியது.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள கிரக ஆய்வு நிறுவனம், தாக்குதலுக்கு 6 நாட்களுக்கு பின்னர் எடுத்த செய்ற்கைகோள் படங்களை வெளியிட்டு, 2018-ம் ஆண்டு எடுத்த படங்களுக்கும், இப்போது எடுத்த படங்களுக்கும் கிட்டத்தட்ட எந்த வித்தியாசமும் இல்லை. அந்த சுற்றுவட்டாரத்தில் கட்டிட கூரைகளில் துளைகளோ, எரிந்து கருகிய பகுதிகளோ, வெடித்து சிதறிய சுவர்களோ, பெயர்ந்து விழுந்த மரங்களோ இல்லை என்றும் கூறியது.

இதைத்தொடர்ந்து இந்திய விமானப்படை தாக்குதலுக்கு ஆதாரமாக ஒரு ஆவண தொகுப்பை மத்திய அரசிடம் வழங்கியது. அதில் 12 பக்கங்களுக்கு செயற்கைகோள்கள் மற்றும் இந்திய வான் பகுதியில் பறந்த புலனாய்வு விமானங்களில் இருந்து நவீன ரேடார்கள் மூலம் எடுக்கப்பட்ட படங்களும் உள்ளன.

இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 போர் விமானங்கள் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ‘ஸ்பைஸ் 2000’ குண்டுகளை ஊடுருவிய இடங்களில் உள்ள இலக்குகள் மீது வீசின. அந்த குண்டுகள் இலக்கில் உள்ள கட்டிடங்களின் கூரைகளை துளைத்து உள்ளே சென்று வெடித்தன. இதனால் உள்ளே தான் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வான் தாக்குதலில் 80 சதவீத குண்டுகள் சரியான இலக்கில் வீசப்பட்டன. 20 சதவீத குண்டுகள் மட்டுமே விளிம்புகளில் விழுந்ததாகவும் அந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News