செய்திகள்

ஒரு மாதத்துக்கு ரூ.500 என்பது விவசாயிகளை அவமதிக்கும் செயல் - மாயாவதி கடும் தாக்கு

Published On 2019-02-24 23:35 GMT   |   Update On 2019-02-24 23:35 GMT
ஏழை விவசாயிகளுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.500 என்பது அவர்களை அவமதிக்கும் செயலாகும் என பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி கூறியுள்ளார். #Mayawati #Farmer
லக்னோ:

சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 (ஒரு மாதத்துக்கு ரூ.500) நிதியுதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். உத்தரபிரதேசத்தில் இந்த திட்டம் தொடங்கி வைத்த சில மணி நேரத்தில், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, இந்த திட்டம் தொடர்பாக மத்திய அரசை குறைகூறினார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘ஏழை விவசாயிகளுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.500 என்பது அவர்களை அவமதிக்கும் செயலாகும். தங்கள் தொழில் மீது நம்பிக்கை வைத்திருக்கும் விவசாயிகள், தங்கள் விளைச்சலுக்கு லாபகரமான விலையையே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு சிறு பணத்தை கொடுக்கும் பா.ஜனதாவின் மனநிலை கோரமானது மட்டுமின்றி ஆணவப்போக்கிலானது. தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற பா.ஜனதா தவறிவிட்டது’ என்று கடுமையாக சாடினார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னால், கொஞ்சம் விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.17 கொடுப்பது வெறும் ஏமாற்றுவேலை என்று கூறியுள்ள மாயாவதி, விவசாயிகள் பிரச்சினையில் பா.ஜனதா மட்டமான முறையில் சிந்திப்பதாகவும், தங்கள் அதிகாரத்தையும், அரசு எந்திரத்தையும் தொடர்ந்து தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.#Mayawati #Farmer
Tags:    

Similar News