செய்திகள்

ஆதாருடன் ‘பான்’ எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2019-02-07 01:43 GMT   |   Update On 2019-02-07 01:43 GMT
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் எண்ணுடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #PanCard #AadhaarCard
புதுடெல்லி :

ஆதார் என்னும் அடையாள அட்டைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து, அரசியல் அமைப்பு சட்டப்படி ஆதார் செல்லத்தக்கதுதான் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

வருமான வரி சட்டத்தின் பிரிவு 139 ஏஏ, வருமான வரி கணக்கு தாக்கலின் போது, ஆதார் எண்ணுடன் ‘பான்’ எண் என்று அழைக்கப்படுகிற வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறுகிறது. இதுவும் சுப்ரீம் கோர்ட்டால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு இடையே ஸ்ரேயா சென், ஜெயஸ்ரீ சத்புட்டே ஆகிய இருவரும் 2018-19 மதிப்பீட்டு ஆண்டுக்கான வரிமான வரி கணக்குகளை ஆதார், பான் எண் இணைக்காமல் தாக்கல் செய்யலாம் என டெல்லி ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, எஸ். அப்துல் நசீர் ஆகியோரை கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது.

விசாரணைக்கு பின்னர் நீதிபதிகள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவில் நீதிபதிகள், ‘‘ஆதார் பற்றிய வழக்கு இந்த கோர்ட்டில் நிலுவையில் உள்ளது என்பதை கருத்தில் கொண்டுதான் டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்பின்னர் இது தொடர்பான வருமான வரிச்சட்டம் பிரிவு 139 ஏஏ செல்லுபடியாகத்தக்கது என்று இந்த கோர்ட்டு முடிவு செய்தது. அதை கருத்தில் கொண்டு, வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என உத்தரவிடப்படுகிறது’’ என கூறப்பட்டுள்ளது.

மேலும், ‘‘2018-19 மதிப்பீட்டு ஆண்டை பொறுத்தமட்டில், டெல்லி ஐகோர்ட்டு உத்தரவின்படி 2 பேரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துவிட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2019-20 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கை இந்த கோர்ட்டின் உத்தரவுக்கு உட்பட்டுதான் அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது. #SupremeCourt #PanCard #AadhaarCard
Tags:    

Similar News