செய்திகள்

துப்பாக்கி முனையில் பட்டப்பகலில் துணிகரம் - பீகாரில் இன்று ரூ.10 கோடி நகை கொள்ளை

Published On 2019-02-06 09:54 GMT   |   Update On 2019-02-06 09:54 GMT
பீகார் மாநிலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்துக்குள் இன்று புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் பணியாளர்களை மிரட்டி 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை அள்ளிச் சென்றனர். #Goldlooted #Rs10crorelooted
பாட்னா:

பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டம், பகவான்பூர் பகுதியில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது.

இன்று காலை இந்த அலுவலகத்துக்கு வந்த 6 பேர் தங்க நகையின் மீது பண உதவி தேவை என வாசலில் இருந்த காவலாளியிடம் கூறினர். காவலாளி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றபோது, பின்னால் இருந்து ஒருவன் அவரது தலையில் ஆயுதத்தால் தாக்கினான்.

காவலாளி மயங்கி விழுந்த நிலையில், ஆறுபேரும் துப்பாக்கிகளை உருவியவாறு அலுவகத்துக்குள் பாய்ந்தனர். மேனேஜர் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய இருவர் தங்க நகைகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பெட்டக அறைக்கு அவரை அழைத்துச் சென்றனர்.



வெளியே நின்ற கொள்ளையர்கள் இதர பணியாளர்களை மிரட்டி, கூச்சலிடாத வகையில் பார்த்து கொண்டனர். மேனேஜரிடம் இருந்த சாவிகளை பறித்து, பெட்டகங்களை திறந்த கொள்ளையர்கள் 5 பெரிய பைகளில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை அள்ளிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

கொள்ளைபோன நகையின் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் என தெரிவித்த போலீசார் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணிகர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவன பணியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #Goldlooted  #Rs10crorelooted

Tags:    

Similar News