செய்திகள்

சிபிஐ நடவடிக்கைக்கு எதிராக மம்தாவின் தர்ணா 2வது நாளாக நீடிப்பு- தொண்டர்கள் திரண்டனர்

Published On 2019-02-04 03:45 GMT   |   Update On 2019-02-04 03:45 GMT
சிபிஐ நடவடிக்கைக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் நீடிப்பதால், கொல்கத்தாவில் ஏராளமான தொண்டர்கள் திரண்டுள்ளனர். #CBIIssue #MamataBanerjee
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தில் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை சென்றனர்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, கமிஷனர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து கமிஷனர் வீட்டுக்கு விரைந்த மம்தா பானர்ஜி, அங்கு மாநில டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், கமிஷனர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  மேற்கு வங்காளத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் மோடியும், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், தாங்கள் நினைத்திருந்தால் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வந்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்திருக்க முடியும் என்றும் கூறினார்.

அதன்பின்னர், சிபிஐ நடவடிக்கையை கண்டித்தும், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை காக்க வலியுறுத்தியும் மெட்ரோ  சேனல் அருகே மம்தா பானர்ஜி நேற்று இரவு தர்ணாவை தொடங்கினார். இதில் கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரும் பங்கேற்றார்.



மம்தாவின் போராட்டம் இன்றும் நீடிக்கிறது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டவண்ணம் உள்ளனர்.

மம்தாவுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.  #CBIIssue #MamataBanerjee
Tags:    

Similar News