செய்திகள்

ஜம்மு- காஷ்மீரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

Published On 2019-02-03 08:19 GMT   |   Update On 2019-02-03 08:45 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இரு எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்பட ரூ.44 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். #PMModi #Modiinauguratess #ModiinJammu
ஜம்மு:

காஷ்மீரில் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. முதல்-மந்திரியாக இருந்த மெகபூபா முப்திக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் பா.ஜனதா விலக்கிக் கொண்டது.

அதைதொடர்ந்து காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் ஜனநாயக கட்சிக்கான ஆதரவை விலக்கி கொண்ட பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி இன்று காஷ்மீர் புறப்பட்டு சென்றார். காலை லடாக்கில் உள்ள லே நகரை சென்றடைந்தார். லே பகுதியில் அவர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர், ஜம்முவில் ரூ.35 கோடி மதிப்பிலான திட்டங்களையும், காஷ்மீரில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கிவைத்தார்.

விஜய்பூர், அவந்தி போரா ஆகிய 2 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல்லையும் நாட்டினார்.  விஜய்ப்பூரில் நடைபெறும் பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இன்று பிற்பகல் மோடி உரையாற்றுகிறார்.


பிரதமர் மோடி வருகையையொட்டி காஷ்மீரில் இன்று முழு அடைப்புக்கு பிரிவினைவாத தலைவர்கள் மிர்வாய்ஸ் உமர் பரூக், சையத் அலி கிலானி மற்றும் யாசின் மாலிக் ஆகியோர் அழைப்பு விடுத்து இருந்தனர்.

எனவே, பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவர் மிர்வாய்ஸ் உமர் பரூக் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மோடி வருகையையொட்டி ஸ்ரீநகரில் உள்ள எஸ்.கே. இண்டர்நே‌ஷனல் மாநாட்டு மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் உள்ளிட்ட பல பகுதிகளில்  இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது. சில இடங்களில் ரெயில் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. #PMModi #Modiinauguratess #ModiinJammu
Tags:    

Similar News