செய்திகள்

எளிதாக வர்த்தகம் செய்ய உகந்த உலக நாடுகள் பட்டியலில் முதல் 50 இடங்களில் இந்தியா - மோடி இலக்கு

Published On 2019-01-18 09:50 GMT   |   Update On 2019-01-18 10:17 GMT
எளிதாக வர்த்தகம் செய்ய உகந்த உலக நாடுகளின் பட்டியலில் முதல் 50 இடங்களில் இந்தியா அடுத்த ஆண்டு இடம்பெறும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். #VibrantGujarat #PMModi
அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘வைப்ரன்ட் குஜராத்’ (எழுச்சிபெற்ற குஜராத்) உச்சிமாநாட்டின் 9-ம்  நிகழ்வாக இன்று நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.

'நாட்டின் பிரதமராக நான் பதவியேற்ற பின்னர் ‘சீர்திருத்தம், செயல்பாடு, புத்தாக்கம், மீண்டும் செயல்பாடு’ என்ற தாரக மந்திரத்தை முன்வைத்து நமது அரசு நிர்வாகம் செயலாற்றி வருகின்றது.



கடந்த 1991-ம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் கடந்த நான்காண்டுகளாகத்தான் சராசரியான பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாகவும், பணவீக்கம் 4.6 சதவீதமாகவும் தொடர்ந்து இருந்து வருகிறது.

உலக வங்கியின் அட்டவணைப்படி எளிதாக வர்த்தகம் செய்ய உகந்த உலக நாடுகள் பட்டியலில் இந்தியா 75 இடங்கள் முன்னேறி தற்போது 77-வது இடத்தை பிடித்துள்ளது. அடுத்த ஆண்டுக்குள் முதல் 50 நாடுகள் என்ற இடத்தை இந்தியா எட்டிப்பிடிக்கும் வகையில் நமது நடவடிக்கைகள் வேகமாக அமைய வேண்டும் என்று எனது குழுவினரை நான் வலியுறுத்தியுள்ளேன்’ என்று மோடி குறிப்பிட்டார்.

குஜராத்தின் முதல்வராக முன்னர் பதவி வகித்த மோடி அம்மாநிலத்தில் வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்த ‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சிமாநாட்டுக்கு ஏற்பாடு செய்தார் என்பது நினைவிருக்கலாம். #VibrantGujarat #PMModi
Tags:    

Similar News