செய்திகள்

ஆந்திரா மாநிலத்துக்கு தனி உயர் நீதிமன்றம் அமைக்க ஜனாதிபதி ஒப்புதல்

Published On 2018-12-26 15:24 GMT   |   Update On 2018-12-26 15:24 GMT
ஜனவரி முதல் தேதியில் இருந்து இயங்கும் வகையில் ஆந்திரா மாநிலத்துக்கென தனியாக அமராவதியில் உயர் நீதிமன்றம் அமைக்கும் அறிவிக்கை ஜனாதிபதி ஒப்புதலுடன் இன்று வெளியானது. #Newhighcourt #APhighcourt
புதுடெல்லி:

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா என்ற மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர் இரு மாநிலங்களுக்கும் பொதுவாக ஐதராபாத் நகரில் ஆந்திரா, தெலுங்கானா உயர் நீதிமன்றம் இயங்கி வருகிறது.

முன்னர் ஆந்திராவின் தலைநகரமாக இருந்த ஐதராபாத் நகரம் தெலுங்கானா மாநிலத்துக்கு சொந்தமாகிப்போன நிலையில், ஆந்திரா மாநிலத்தின் புதிய தலைநகரமாக அமராவதி நகரம் உருவாகி வருகிறது.

மிக பிரமாண்டமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் உருவாகிவரும் அமராவதி நகரில் ஆந்திரா மாநிலத்துக்கென தனியாக புதிய உயர் நீதிமன்றம் அமைக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம்  ஒப்புதல் அளித்தது.

இந்த புதிய உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தற்போது உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றும் நீதிபதி ரமேஷ் ரங்கநாதன் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வெளியிட்டுள்ளார்.

இந்த உத்தரவை தொடர்ந்து, ஜனவரி முதல் தேதியில் இருந்து அமராவதியில் புதிதாக செயல்பட தொடங்கும் இந்த நீதிமன்றம் இந்தியாவின் 25-வது உயர் நீதிமன்றமாகும். தலைமை நீதிபதியுடன் மேலும் 15 நீதிபதிகள் இங்கு நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #Newhighcourt #APhighcourt   
Tags:    

Similar News