செய்திகள்

வாஜ்பாய் உருவம்பதித்த 100 ரூபாய் நாணயம் விரைவில் வெளிவருகிறது

Published On 2018-12-14 07:26 GMT   |   Update On 2018-12-14 08:15 GMT
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவம்பதித்த 100 ரூபாய் நாணயத்தை விரைவில் வெளியிட மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. #Vajpayee

புதுடெல்லி:

மறைந்த பிரதமர் வாஜ்பாயை கவுரவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் உதவிகளுக்கு அவரது பெயரை மத்திய அரசு சூட்டி உள்ளது.

வாஜ்பாய்க்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிட தற்போது மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

இதற்காக 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது. 35 கிராம் எடை கொண்ட இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாஜ்பாயின் உருவம் பதிக்கப்பட்டு இருக்கும். அவரது உருவத்துக்கு கீழ் அவரது பெயர் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும்.

அதன் அருகில் வாஜ்பாய் வாழ்ந்த காலமான 1924-2018 என்றும் பொறிக்கப்பட உள்ளது. இந்த வடிவமைப்புக்கான வேலைகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.

நாணயத்தின் மற்றொரு பக்கத்தில் அசோக சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கும். சிங்கமுகம் கொண்ட அந்த சின்னத்தின் மத்தியில் “சத்தியமேவ ஜெயதே” என்று பொறிக்கப்பட்டு இருக்கும்.

அதற்கு கீழ் ரூ.100 என்று பொறிக்கப்பட்டு இருக்கும். இந்த புதிய நாணயத்தை விரைவில் வெளியிட மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. #Vajpayee

Tags:    

Similar News