செய்திகள்

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த 10-ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

Published On 2018-12-07 20:29 GMT   |   Update On 2018-12-07 21:29 GMT
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தும் விதமாக வருகிற 10-ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது. #ParlimentWinterSession #OppositionParties
புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 11-ந் தேதி தொடங்கி ஜனவரி 8-ந் தேதி வரை நடக்கிறது. பொதுத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் முழுமையான கூட்டத் தொடர் இது என்பதால் பாராளுமன்ற இரு அவைகளையும் சுமுகமாக, ஒருமித்த கருத்துடன் நடத்த மத்திய அரசு விரும்புகிறது.

இதைத்தொடர்ந்து கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாளான 10-ந் தேதி டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்து உள்ளது.

கூட்டத்தில் பிரதமர் கலந்துகொண்டு பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல்களை குறிப்பிட்டு அதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்வது மரபாக உள்ளது. அந்த வகையில், பிரதமர் மோடி 10-ந் தேதி கூட்டத்தில், சபை அமளி இன்றி சுமுகமாக நடைபெறவும், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஆதரவு அளிக்கும்படியும் எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுப்பார்.



குறிப்பாக மாநிலங்களவையில் நிலுவையில் கிடக்கும் உடனடி முத்தலாக் மசோதாவை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடும். இது தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே அவசர சட்டம் பிறப்பித்து இருப்பது நினைவு கூரத்தக்கது.

இதேபோல் இந்திய மருத்துவ கவுன்சில் சட்ட திருத்த மசோதா, கம்பெனிகள் சட்ட திருத்த மசோதா ஆகியவற்றையும் இந்த தொடரில் நிறைவேற்ற பா.ஜனதா அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குளிர்கால தொடருக்காக பாராளுமன்றம் கூடும் தினத்தில், அண்மையில் தேர்தல் நடந்து முடிந்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பதால் அன்று ஆளும் பா.ஜனதாவும், எதிர்க்கட்சியான காங்கிரசும் அனல் பறக்க மோதிக் கொள்வதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

வழக்கமாக நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும். ஆனால் கடந்த ஆண்டைப் போலவே இந்த வருடமும் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இந்த ஆண்டு தொடர் தாமதமாக தொடங்குவதற்கு 5 மாநில சட்டசபை தேர்தல்கள் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. #ParlimentWinterSession #OppositionParties
Tags:    

Similar News