செய்திகள்

ராஜஸ்தானில் காங்கிரஸ், ம.பி.யில் இழுபறி : கருத்துக்கணிப்பில் தகவல்

Published On 2018-12-07 13:28 GMT   |   Update On 2018-12-07 13:28 GMT
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ், பாஜகவினரிடையே கடும் இழுபறி நிலவுகிறது என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #FiveStatesAssemblyElections #PollOfExitPolls
புதுடெல்லி:

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது.

2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக நடக்கும் இத்தேர்தலின் முடிவுகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய நிலையிலான கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.

அதன்படி, பாஜக ஆட்சி செய்யும் ம.பி.யில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் இழுபறி நிலவுகிறது என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக 40 சதவீதம் வரையிலான வாக்குகளை பெற்று 102-120 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும்,  காங்கிரஸ் 41 சதவீத வாக்குகளை பெற்று 104-122 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ம.பி.யில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 230 தொகுதிகளில் பாஜக 126 தொகுதிகளிலும், காங்கிரஸ் 89 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 6 தொகுதிகளிலும், மற்றவை 9 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என பெரும்பான்மையான கருத்துக்கணிப்புக்களில் தெரிய வந்துள்ளது. 



இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி 119 முதல் 141 தொகுதிகள் வரையில் வெற்றி பெறும் என்றும்,  பாஜக 55 முதல் 72 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 105 தொகுதிகளிலும், பாஜக 85 தொகுதிகளிலும், மற்றவை 9 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. 

தெலுங்கானாவிலும் ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியே வெற்றி பெறும் என டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #FiveStatesAssemblyElections #PollOfExitPolls
Tags:    

Similar News