செய்திகள்

கர்நாடகம் - தலைமறைவான முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார்

Published On 2018-11-10 13:28 GMT   |   Update On 2018-11-10 13:28 GMT
தலைமறைவான கர்நாடக மாநிலத்தின் முன்னாள் மந்திரி ஜனார்த்த ரெட்டி குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் இன்று ஆஜரானார். #Karnataka #JanardhanaReddy
பெங்களூரு:
 
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆர்.டி.நகர் அருகே கனகநகரில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் சையத் அகமது பரீத். இவர், தான் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி இருந்தார். இதனை நம்பி முதலீடு செய்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு பல கோடி ரூபாயை திரும்ப கொடுக்காமல் பரீத் மோசடி செய்திருந்தார்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பரீத்திற்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதுதொடர்பாக பரீத் மீது அமலாக்கத் துறையில் வழக்கும் பதிவானது.



இந்த வழக்கில் இருந்து விடுபடவும், அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணையில் இருந்து தப்பிக்கவும், பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டியின் உதவியை பரீத் நாடினார். அமலாக்கத்துறை வழக்கை சுமூகமாக முடித்து கொடுக்க பரீத்திடம் ரூ.20 கோடி பேரம் பேசியதுடன், பணத்திற்கு பதிலாக 57 கிலோ தங்க கட்டிகளை ஜனார்த்தனரெட்டி பெற்றுவிட்டு தலைமறைவானதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், தலைமறைவாகிய அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக கருதப்பட்ட கர்நாடக மாநிலத்தின் முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி இன்று குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் தனது வழக்கறிஞர்களுடன் ஆஜரானார்.

அப்போது அவர் கூறுகையில், தன் மீது போடப்பட்ட வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. போலீசாரிடம் எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்தார். #Karnataka #JanardhanaReddy
Tags:    

Similar News