செய்திகள்

யார் மிருகம்? - காப்பகத்துக்குள் நுழைந்து புலியை அடித்துக் கொன்ற கிராம மக்கள்

Published On 2018-11-05 13:56 GMT   |   Update On 2018-11-05 13:56 GMT
உத்தரப்பிரதேச மாநிலத்தில் புலிகள் காப்பகத்தில் நுழைந்த கிராம மக்கள், கொடூரமாக தாக்கி புலி ஒன்றை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #UP
லக்னோ:

இந்தியாவின் தேசிய விலங்காக இருக்கும் புலியின் எண்ணிக்கை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு அவற்றை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேவேளை மனிதர்களை கொன்று உண்ணும் புலிகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில், அவற்றை வனத்துறை அதிகாரிகள் சுட்டு வீழ்த்துவதும் வழக்கம். இந்த நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் சால்டவ் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் புலி தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.



இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அப்பகுதியில் உள்ள துத்வா புலிகள் காப்பகத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதனை தடுக்க வந்த காப்பகத்தின் பாதுகாவலரை தாக்கிய கிராம மக்கள், வனப்பகுதிக்குள் சுற்றித்திரிந்த 10 வயது பெண் புலியை அங்கு இருந்த ஒரு ட்ராக்டரை கொண்டு ஏற்றியுள்ளனர். அதோடு விட்டுவிடாமல், அதனை கட்டையால் சாகும்வரை தாக்கி கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கொல்லப்பட்ட பெண் புலி இதுவரை எந்த மனிதரையும் தாக்கியது இல்லை என்றும், கிராம மக்கள் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டு புலியை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். புலியை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். #UP
Tags:    

Similar News