செய்திகள்

சபரிமலைக்கு வரும் பக்தர்கள், ஊடகவியலாளர்களை தடுக்க கூடாது - கேரள ஐகோர்ட் உத்தரவு

Published On 2018-11-05 09:19 GMT   |   Update On 2018-11-05 09:19 GMT
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களையும் ஊடகங்களை சேர்ந்த செய்தியாளர்களையும் தடுத்து நிறுத்தக்கூடாது என கேரள ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #SabarimalaTemple #KeralaHighCourt
திருவனந்தபுரம்:

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்ததை தொடர்ந்து கடந்த மாதம் ஏராளமான பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர்.

அவர்களில் பலர் நடுவழியில் பம்பா, நிலக்கல் மற்றும் சில பகுதிகளில் இந்து அமைப்பினரால் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பப்பட்டனர். இதுதொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான ஊடகவியலாளர்கள் குவிந்தனர்.

சில செய்தி சேனல்கள் மற்றும் ஊடகங்களின் சார்பில் பெண் நிருபர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை ஒருதரப்பினர் தாக்கி வாகனங்களுக்குள் சிறைபிடித்து வைத்ததாக செய்திகள் வெளியாகின.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் சித்திர திருநாள் பலராம வர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு விசேஷ பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று ஒருநாள் மட்டும் தரிசனத்துக்காக திறக்கப்படவுள்ளது.

இதற்கிடையில், சபரிமலை பகுதியில் செய்தி சேகரிப்பதற்கு இளம்வயது பெண் பத்திரிகையாளர்களை அனுப்ப வேண்டாம் என ஊடகங்க நிறுவனங்களுக்கு இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

இதைதொடர்ந்து, பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு வந்தால் சன்னதியை மூடுவோம் என மேல்சாந்திகள் எச்சரித்துள்ளனர். பம்பா மற்றும் நிலக்கல் பகுதி வழியாக வரும் வாகனங்களை நேற்றிலிருந்து போலீசார் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதனால் சபரிமலை பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.



இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களையும் ஊடகங்களை சேர்ந்த செய்தியாளர்களையும் தடுத்து நிறுத்தக்கூடாது என கேரள ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஐயப்பன் கோவிலின் அன்றாட விவகாரங்களில் அரசு தலையிடக்கூடாது. வாகனங்களை தாக்கி சேதப்படுத்திய போலீசார் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #SabarimalaTemple #KeralaHighCourt 
Tags:    

Similar News