செய்திகள்

சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்கிறார் அமித்ஷா

Published On 2018-10-29 05:27 GMT   |   Update On 2018-10-29 05:27 GMT
வருகிற மண்டல பூஜையின் போது சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அமித்ஷா இருமுடி கட்டி சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #BJP #Amitshah #Sabarimala
திருவனந்தபுரம்:

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு இந்து அமைப்புகளும், பாரதிய ஜனதாவும் ஆதரவு தெரிவித்து களத்தில் குதித்ததால் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. கேரளாவே ஸ்தம்பிக்கும் அளவுக்கு அந்த போராட்டம் மாறியது.

அதேசமயம் போராட்டம் நடத்தியவர்களை ஒடுக்கும் விதமாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையிலும் கேரள அரசு இறங்கி உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் கேரளா வந்த பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கேரள அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். பக்தர்களின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் கம்யூனிஸ்டு அரசு ஆட்சியில் இருந்து இறக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.


முதல்-மந்திரி பினராயி விஜயனும் பாரதிய ஜனதா தயவில் தாங்கள் ஆட்சி செய்யவில்லை என்றும் மக்கள் ஆதரவுடன் தாங்கள் ஆட்சி நடத்துவதாகவும் பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில் கேரளாவில் இருந்து டெல்லி திரும்பும் முன்பு கேரள பாரதிய ஜனதா தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது வருகிற மண்டல பூஜையின் போது தான் சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய விரும்புவதாக அமித்ஷா அவர்களிடம் தெரிவித்தார்.

தலையில் இருமுடி கட்டு சுமந்து பம்பையில் இருந்து நடைபயணமாக சன்னிதானம் சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்வேன் என்றும் அவர் கூறி உள்ளார். அமித்ஷா சபரிமலை வரும் தேதி விரைவில் இறுதி செய்யப்பட உள்ளது. இது பாரதிய ஜனதா தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்து உள்ளது.  #BJP #Amitshah #Sabarimala
Tags:    

Similar News