செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எதிரொலி- சபரிமலை பாதுகாப்பு பணிக்கு 500 பெண் போலீஸ்

Published On 2018-10-05 06:16 GMT   |   Update On 2018-10-05 06:16 GMT
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை அடுத்து சபரிமலை பாதுகாப்பு பணிக்கு 500 பெண் போலீசாரை நியமிக்க திட்டமிட்டுள்ளனர். #Sabarimala
திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ஆனாலும் கேரள அரசும் சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த உடனடியாக நடவடிக்கையில் இறங்கி உள்ளன. இது தொடர்பாக ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டு அதில் முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சபரிமலை கோவில் நடைசாத்தப்பட் டுள்ளது. ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 17-ந்தேதி மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. மறுநாள் 18-ந்தேதி முதல் பக்தர்கள் சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்வார்கள். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்ததால் பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல இனி எந்த தடையும் இல்லை. அவர்கள் ஐப்பசி மாத பூஜையிலும் கலந்து கொள்ளலாம்.

அதே சமயம் சபரிமலையில் பெண்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டி இருப்பதால் அது தொடர்பான நடவடிக்கைகளும் மாநில அரசு, தேவசம் போர்டு சார்பில் செய்யப்பட்டு வருகிறது.


சபரிமலை வரும் பெண் பக்தர்கள் பாதுகாப்புக்காக அதிக அளவு பெண் போலீசாரை பம்பை, சன்னிதானத்தில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது. போலீஸ் நிலையம் வாரியாக பெண் போலீசை தேர்வு செய்து சபரிமலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. சபரிமலை கோவில் நடை திறப்புக்கு 2 நாட்கள் முன்னதாக வருகிற 15-ந்தேதியே பெண் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை பாதுகாப்பு பணிக்கு 500 பெண் போலீசாரை நியமிக்க திட்டமிட்டுள்ளனர். அவர்களில் 350 பேர் கேரளாவில் இருந்து பணி அமர்த்தப்படுவார்கள். மற்றவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்படுகிறார்கள்

இது தொடர்பாக கேரள அரசு தலைமைச் செயலாளர் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் இந்த 5 மாநிலங்களில் இருந்து பெண் போலீசாரை சபரிமலை பாதுகாப்பு பணிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டு உள்ளார்.  #Sabarimala
Tags:    

Similar News