செய்திகள்

டெல்லியில் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

Published On 2018-10-04 10:40 GMT   |   Update On 2018-10-04 10:40 GMT
டெல்லியில் இன்று முதல்வர் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு, துப்புரவு பணியாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். #DelhiSanitationWorkers
புதுடெல்லி:

கிழக்கு டெல்லி மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு ஒழுங்காக சம்பளம் வழங்கவேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தற்காலிக துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் டெல்லியில் அடிக்கடி குப்பைகள் மலைபோல் தேங்குகின்றன.

இந்நிலையில், கிழக்கு டெல்லி மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 12-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது வாரமாக போராட்டம் நீடிக்கிறது. இன்று முதல்வர் கெஜ்ரிவால் வீட்டின் முன்பாக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.


இந்த போராட்டம் பற்றி கெஜ்ரிவால் கூறுகையில், துப்புரவு பணியாளர்களை பா.ஜ.க. தவறாக வழிநடத்துவதாகவும், பணியாளர்களை சந்தித்து உண்மை நிலவரத்தை விளக்க உள்ளதாகவும் தெரிவித்தார். கிழக்கு டெல்லி மாநகராட்சி பா.ஜ.க. வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

துப்புரவு பணியாளர்கள் சம்பளம் தொடர்பான வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இரண்டு நாட்களுக்குள் 500 கோடி ரூபாய் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுவிக்கப்படும் என மாநில அரசு தெரிவித்தது. இதன்மூலம் பிரச்சினையை தீர்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. #DelhiSanitationWorkers #SanitationProtest #Kejriwal
Tags:    

Similar News